சென்னை: ஐபிஎல் குழுவில் இடம் பெற்றிருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிதி நெருக்கடி காரணமாக, வீரர்களுக்கு சம்பள பாக்கியை வைத்தது. இந்த நிலையில் நேற்றிரவு ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ)அதிரடியாக நீக்கியது.
5வது ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறியது. நிதி நெருக்கடியில் சிக்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்தை கடந்த 31ம் தேதிக்குள் வீரர்களின் சம்பளத்தை முழுமையாக வழங்குமாறு, இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) உத்தரவிட்டது.
ஆனால் கொடுக்கப்பட்ட காலகெடுவிற்குள் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்தினால் வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் பிசிசிஐ காலகெடுவை நீட்டித்து நேற்று மாலை 5 மணிக்குள் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்பனை செய்யும் வகையில் ஏலம் விடுவதாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியானது. இதையடுத்து பி.வி.பி. நிறுவனம் ரூ.900 கோடிக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விலைக்கு வாங்க முன்வந்தது.
ஆனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் டெக்கான் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ் லிமிடேட் நிறுவனம் விற்பனை விலை மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்கவில்லை என்று அணியை விற்க மறுத்து, ஏலத்தை ரத்து செய்தது. இதனால் அளிக்கப்பட்ட காலகெடுவிற்குள் வீரர்களுக்கு சம்பளம் அளிக்க தவறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியை குறித்து முடிவு எடுக்க ஐபிஎல் ஆட்சிமன்ற குழு நேற்றிரவு அவசர கூட்டத்தை கூட்டியது.
இதன் முடிவில் ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் நேற்று வெளியிட்டார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
இன்று நடைபெற உள்ள பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் ஐபிஎல் குழுவில் புதிய அணியை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.