Wednesday, October 9, 2013

லப்டப்... லப்டப்..!


டாக்டர் என்றதுமே 'நினைவு வருவது அவர் கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப் மாலை. உங்களுக்கும் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பைத் தொங்கவிட்டுக்கொண்டு, நடக்கும் ஆசை இருக்கும். இந்த 'ஸ்டெதாஸ்கோப்’ உருவானது எப்படி? செயல்படுவது எப்படி என்று பார்ப்போமா...

'ஸ்டெதாஸ்கோப்’ கருவியைக் கண்டுபிடித்தவர் 'லென்னே’ என்கிற பிரெஞ்சு மருத்துவர். 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec). அவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை.
லூவர் என்ற இடத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார் லென்னே. சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கையில் மரக்கட்டைகள், நீண்ட கட்டைகளின் ஒரு முனையில் சின்ன ஆணிகளை வைத்து, உரசி அந்தச் சத்தத்தை இன்னொரு முனையை காதில் வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த லென்னேயின் மூளையில் பல்ப் எரிந்தது. மறுநாள் சிறுவர்கள் செய்ததைப் போலவே ஒரு காகித அட்டைக் குழலைச் செய்தார். அதை தன்னிடம் வந்த நோயாளிகளின் மார்பில்வைத்து, வருகிற ஒலியை காதில் கேட்டார். அப்போது கேட்கும் ஒலி துல்லியமாக இருந்தது. இதுதான் முதல் 'ஸ்டெதாஸ்கோப்’ உருவான கதை. 1816- ல் நடந்த நிகழ்ச்சி இது.

காகித அட்டைபோல பல்வேறு பொருட்களைவைத்து வெவ்வேறு விதமாகக் குழல்கள் செய்துபார்த்தார் லென்னே. மூன்று ஆண்டுகள் அவரே காசநோயால் அவதிப்பட்டார். 1819-ல் தன்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுகளை 'டிலா ஆஸ்கல்டேஷன் மெடியேட்’ என்கிற நூலாக எழுதினார்.
முழு அளவு காட்டு

எந்தப் பொருளைப் பயன்படுத்திக் குழல் செய்தால், நன்றாக சத்தம் கேட்கும் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்தார் லென்னே. 1826-ல் தன் நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். அதற்குப் பின் ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிட்டார்.

லென்னே காலத்துக்குப் பின், ஸ்டெதாஸ்கோப் பல வடிவங்ளைப் பெற்றது. ஒரு குழல், இரண்டு குழல்களானது. ஒலி துல்லியமாகக் கேட்கக்கூடிய வகையிலும் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும் புதுப்புது வகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது நாம் மாலை போல பார்க்கும் ஸ்டெதாஸ்கோப் 'பைனாரல் ஸ்டெத்’ (Binural Steth) என்பது. இதில் இரண்டு செவித் துண்டுகள், ஒரு மார்புத் துண்டு, ஆங்கில Y எழுத்துப் போன்ற குழாய் போன்றவை உள்ளன. மார்ப்புத் துண்டு நோயாளியின் உடல் மீது வைக்கப்படுகிறது. செவித் துண்டுகள் மருத்துவரின் இரு காதுகளிலும் வைக்கப்படுகின்றன. குழல் வழியாக நோயாளியின் இதயச் சத்தங்களும், நுரையீரல் சத்தங்களும் கேட்கும். பைனாரல் ஸ்டெதாஸ்கோப், 1855-ல் டாக்டர் கம்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இதயம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பதால் 'லப் டப்’ என்ற சத்தம் எழுகிறது. 'கூர்மையான லப், சற்றே நீண்ட டப்’ ஆகிய ஒரு ஒலிகளும் இதயத்தின் சுருங்கி விரியும் பணிகளால் ஏற்படுபவை.
இதயத்தில் கோளாறுகளோ, இதய வால்வுகளில் பிரச்னைகளோ இருந்தால், 'லப் டப்’ தவிர, கூடுதல் ஒலிகள் கேட்கும். இவற்றை மருத்துவ மொழியில் 'மர்மர்’ (Murmur) என்பார்கள்.

மார்புத் துண்டை, நோயாளியின் மார்புக் கூட்டின் வெவ்வேறு பகுதிகளில் வைத்துப் பார்க்கும்போது, அவருடைய மூச்சு ஒலி, மூச்சு விடுதலில் கோளாறுகள் இருந்தால் அதனால் ஏற்படும் கூடுதல் ஒலிக¬ளைக் கேட்க முடியும். மனித உடலின் பிரச்னைகளை தெளிவாகப்புரிய வைக்கும் ஒரு உன்னதக் கருவி ஸ்டெதாஸ்கோப்.
 
முழு அளவு காட்டு

நீங்களே செய்யலாம் ஒரு ஸ்டெதாஸ்கோப்:

ஒரு கனமான காகிதத்தையோ, அட்டையையோ எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகச் சுருட்டி, இரு பக்கங்களிலும் நூலால் கட்டிவிடுங்கள்.
குழாய்போல இருக்கும் அல்லவா? அந்த அட்டைக் குழலின் ஒரு முனையை, உங்கள் நண்பனின் இடது பக்க மார்பில் வைத்து, இன்னொரு முனையில் உங்கள் காதைவைத்துக் கொள்ளுங்கள்.
'லப் டப்’ என்று ஒரு சத்தம் கேட்கிறதா?

இதையே குழல்போல இல்லாமல், கூம்பு போல செய்து, அகலமான பகுதியை நண்பனின் மார்பின் மேல் வைத்துவிட்டு அகலம் குறைவான பகுதியைக் காதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது 'லப் டப் லப் டப்’ நன்றாகவே கேட்கும். நண்பனை இழுத்து மூச்சுவிடச் சொல்லுங்கள். இப்போது உங்கள் ஸ்பெஷல் கூம்பைக் கொஞ்சம் இப்படியும் அப்படியும் அவர் மார்பில் இடம் மாற்றி வைத்தால், அவர் மூச்சுவிடும் சத்தம்கூட காதில் தெளிவாகக் கேட்கும்.



நன்றி : விகடன்