உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியாக கருதப்பட்ட பெசி கூப்பர் (வயது 116) அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். கின்னஸ் சாதனை பதிவுகளின்படி 1997ம் ஆண்டு வரை 122 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஜீனே கல்மென்ட் என்பவர் உலகில் வயது முதிர்ந்த நபராக கருதப்பட்டார். இவர் பிரான்சு நாட்டில் பிறந்தவர்.
இந்த சாதனைக்கு பிறகு அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பெசி கூப்பரை, உலகில் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 115. சில மாதங்களுக்கு முன்னர் வயிற்றில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்காக இவர் அட்லாண்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை பெசி கூப்பர் சிகை அலங்காரம் செய்துக் கொண்டார். பின்னர் தங்கள் குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு கொண்டாடிய கிருஸ்துமஸ் விழாவை வீடியோவில் பார்த்து ரசித்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் பெசி கூப்பருக்கு செயற்கை சுவாசம் அளித்தனர். என்றாலும் பலனின்றி சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார்.
அவரது மணரம் குறித்து பேட்டியளித்த பெசியின் மகன் சிட்னி கூப்பர் கூறுகையில், 'இன்று காலை சிகை அலங்காரம் செய்து கொண்டபோது, அவர் போவதற்கு தயாராக இருந்தது போல் தோன்றியது' என்றார். அமெரிக்காவின் டென்னசீ மாவட்டத்தில் பிறந்த பெசி, முதலாம் உலகப் போரின் போது, டீச்சராக வேலை செய்யும் நோக்கில் ஜார்ஜியா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு 116 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.