குழந்தையாக இருந்தபோது உடை, தின்பண்டம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். பாசமாக பழகுகிறோம். வளர்ந்த பிறகு எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்க்கிறோம், சண்டை போடுகிறோம். வளர வளர எதிர்ப்புணர்ச்சியும் வளர்கிறது. ஏன்?
குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் அன்பிற்காகப் போட்டியிடுகிறோம். மாணவப் பருவத்தில் படிப்பு, விளையாட்டில் போட்டி போடுகிறோம். வளர்ந்ததும் மற்றவரின் கவனம் கவருவதற்காகவும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து பெறுவதற்காகவும் போட்டியிடுகிறோம்.
இப்படி வாழ்க்கையின் பெரும் பகுதி போட்டி போடுவதிலேயே கழிகிறது. அதனால் பொறாமை எண்ணம் நம் உடன்பிறப்பாகவே உள்ளுக்குள் வளர்ந்து விடுகிறது. அதுவே அன்புறவை சீர்கெடுக்கிறது. வளர்த்த பெற்றோரையே வாடி நிற்கும் அளவுக்கு தவிக்கவிடும் கல்நெஞ்சக்காரர்களாக மாறிவிடுகிறோம். இதனால் உடன் பிறந்த சகோதரர்களையும் `நீயா, நானா?' பார்த்து விடுவோம் என்று பகையாளி போல் பார்க்க வைக்கிறது.
வெற்றி பெறாதவர், வெற்றி பெற்றவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார், வலியவர் எளியவரை கேலி செய்கிறார், இருப்பவர் இன்னும் பெரியவரை எண்ணி ஏக்கப்படுகிறார். மனமெங்கும் பொறாமையும், பகையுணர்வுமே விஞ்சி நிற்கிறது.
ஏன் நமக்குப் பொறாமை வருகிறது? ஏன் குடும்பங்கள் பிரிந்து போகின்றன? இந்தக் கேள்விகளுக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். விட்டுக் கொடுக்காமை தான்.
பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே அதை நாம் பேசித் தீர்ப்பதில்லை. அது பெரிதாகிய பின் அதை சாதாரண முறைகளில் பேசித் தீர்ப்பது சிக்கலாகி விடுகிறது.
நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நாம் மன்னிப்புக் கேட்பதில்லை. நாம் முரண்படும்போது முரட்டுத்தன சிந்தனைக்கு தயாராகி விடுகிறோம். அண்டி வாழும்போது அடிவருடிகளாகவும் மாறி விடுகிறோம். நாம் கேள்விப்படும் தகவல்களை பரிசோதித்துப் பார்ப்பதற்குப் பதிலாக அப்படியே நம்பி விடுகிறோம். வதந்தியை நம்பி முடிவெடுக்கிறோம், சொந்தங்களைக் கண்டிக்கிறோம். மரியாதை கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். இவையெல்லாம் பிரச்சினை பெரிதாவதற்கு முக்கியக் காரணங்கள்.
பலவீனமானவர்களைச் சுரண்டும், பணக்காரர்களை அண்டி வாழும் நமது பலவீனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. நமக்கும் பல நேரங்களில் மன்னிக்கும் குணத்தை விட பழி வாங்குவதே சரியென்று படுகிறது, நாமும் ஒருநாள் வயோதிகர்களாக மாறுவோம் என்பதை இன்றைய பொழுதுவரை நாம் மறுக்கிறோம். எதையும் எதிர்த்து மார் தட்டுகிறோம். இவையெல்லாம் நாம் சரியான மனிதனில் இருந்து நழுவி சராசரிகளில் ஒருவனாக வாழ்வதற்கு முக்கியக் காரணமாகிறது.
கூட்டமாக வாழ்வதுதான் மனித இயல்பு, அதனால்தான் நமது குடும்பங்களுக்கு வெளியிலும் நாம் நம் உறவைத் தேடுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தால்தான் நமக்கு முழுமை உணர்வு கிடைக்கிறது. உறவைக் கவனமாகப் பாதுகாக்காவிட்டால் வாழ்வு கசந்துவிடும். உறவு பேணுவதை எப்படிச் செய்வது?
`எனக்கு முன்னால் நடக்காதே நான் பின் தொடரமாட்டேன். எனக்குப் பின்னால் நடக்காதே நான் வழிகாட்ட மாட்டேன். என்னோடு கூட நட, என் நண்பனாய் இரு', அறிஞர் ஆல்பர்ட் காம்யூவின் அற்புத வரிகள் இவை.
மனிதர்களுக்கு எப்போதுமே `தான்' என்ற அகங்காரம் உண்டு. அவனால் முன்னால் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது, பின்னால் வருபவர்களை அரவணைத்துச் செல்ல முடியாது. தனக்கு சமமாக நட்பு பாராட்டுபவனிடம் மட்டும் அவன் சாதுவாக இருக்கிறான். இதுவே மனித சுபாவம்.
மனிதன் இயல்பே இப்படி இருப்பதால் யாருமே அப்பழுக்கற்றவர் அல்ல. இருந்தாலும் நீங்கள் திறந்த மனதுடன் இருங்கள். அன்பாகப் பேசுங்கள். ஒவ்வொருவர் முன்னுரிமையும் வேறுபடும், எனவே ஒவ்வொருவர் உறவிலும் இடைவெளியும் பேணுங்கள். மனித உறவில் சூழ்ச்சி கூடாது. மற்றவரின் குறைகளை மன்னிப்பதால் பதிலுக்கு நாமும் மன்னிக்கப்படுவோம்.
"நீ அன்பாக இருப்பதாலும், இரக்கமாக நடந்து கொள்வதாலும் உன்னை பிறர் கோழை என்று எண்ணக்கூடும். இருந்தாலும் நீ அன்புடன் இரு'' என்று காந்திஜி சொன்னதைப்போல, நாம் உறவு பேணுவோம். மனத்தளவிலும் உயர்வு பெறுவோம்.
......................................
தினதந்தி
No comments:
Post a Comment