01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.
03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.
05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.
06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.
09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.
10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.
11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.
12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.
13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.
--------------------------------
by அப்புகுட்டி
தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.
நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.
ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.
காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.
வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.
இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்
நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!
எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!
-----------------------------------------------
by மீனு
பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.
“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.
“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”
“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”
“அதிலே என்ன ரிஸ்க்கு?”
“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”
“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”
“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”
“ஏன்?”
“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!
அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
என்னடா இது!
மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.
ஆறாவது ஆளும்
“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.
நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.
“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.
என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.
“தெரியலையே?”
“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி சொன்னது.
---------------------------------------
by மீனு