என்ன.... லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி வம்சத்தில் வந்த காதல் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளே.... நலம்தானே....?
காதல் மட்டும் இல்லையென்றால் ... ஹே..யப்பா.... இந்த உலகம்
எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்.. ? விலங்குகளோடு வேற்றுமையில்லாமல் மானிட மிருகமும் கூடித்திரிந்திருக்கும்...
மலர்களும்,செடிகளும்,மரங்களும்... எல்லாம் தத்தமது நிறங்களை இழந்து , கறுப்பு வெள்ளையில் அல்லவா காய்த்துப்போயிருக்கும்... ??!
காதல் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர், எத்தனை வகையில் சொன்னாலும் .. திரும்பவுமே புதிதாக சொல்லப்பட்டது போல .. ஏதோ ஒரு சுவாரசியம்.. புதைந்திருப்பது.. அதிசயத்திலும் அதிசயம்தான்... ???
காதலை மட்டும் கடவுள் படைக்காமல் இருந்திருந்தால் ....ஏது இங்கு மனிதனின் அடையாளம்... ?காதல் வந்தபிறகே பூமியில் எல்லாம் வந்தது....
கிரேக்கத்திலும், சுமேரிய நாகரிகத்திலும், எகிப்திய வம்சத்திலும் எண்ணற்ற காதல் பொக்கிசங்கள் குவிந்து கிடக்கின்றன... இந்த காதலில் நம் தமிழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன... அங்கே ஒரு கிளியோபாட்ராவை உயர்த்திச் சொன்னால்.. இங்கே மாதவி
”இதோ நானிருக்கிறேன் “என்று ஒடோடியும் வருவாளே... ?
இன்னும் சொல்லப்போனால்.. அங்கே காதல் பேசப்பட்ட அளவிற்கு காமமும் சேர்ந்தே பேசப்பட்டது... இங்கோ.. உண்மையான காதலில் , களங்கமில்லாத கற்பு , சந்தனத்தில் மணம்போலா இயற்கையாகவே கலந்திருந்தது... கற்பில்லாத காதலை நம்மவர்கள் காதலென்றே ஏற்றுக்கொண்டதில்லை... காமம் என்றே தள்ளிவைத்தார்கள்...
தமிழனின் நாகரிகம் இன்றளவும் பேசப்படுவதற்கு ..அடிப்படையாக.... இழையோடும் காரணமாக.... இந்த உண்மையான காதலைத்தான் நான் சொல்வேன்... காதல் இவனுக்கு கம்பீரம்...!! காதல் பெண்மையே ஆண்மையின் மணிமகுடம்...!!!
இமயமாய் நிமிர்ந்த , பெண்மையின் மென்மைச் சாயலை , நமது முன்னோரின் எல்லா கலை படைப்புகளிலும் ... நம்மால் காண முடிவதற்கு, காதலும் ஒரு காரணம்...
அந்த வகையிலே.. இன்றைய காதலர்களில் பெரும்பாலோருக்கு தெரியாத , அன்றைய காதல் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சுவையான காதல் நிகழ்வினை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்....
மடலூர்தல் ... இளம்காதலர்களே... இந்த சொல்லை இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... ?
இன்றைய காலகட்டத்தில் ஏற்படுவது போலவே அன்றும் காதலில் வெற்றி,தோல்வி எப்போதும் உண்டு. வெற்றிபெறுகிறபொழுது விண்ணையும் முட்டுகிற உற்சாகம், தோற்றுப்போகிற பொழுதோ , ஒரு கூழாங்கல் தட்டினால்கூட , நிலைதடுமாறி விழுகிற வேதனை அன்றும் காதலர்களுக்கு உண்டு...
அன்று காதல் கொண்ட பெண்ணை, அது தெரிய வருகிற போது , வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துவிடுவார்கள் பெண் வீட்டார்.... அந்த இக்கட்டான சூழலில் , அந்த காதலை ஊருக்கும், உலகுக்கும் தெரிவித்து , தான் விரும்பிய பெண்ணையே மணம் முடிக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் ஆண் பிள்ளைகள் தலைமேல்... என்ன செய்வது.. எப்படி இதை தெரிவிப்பது... அந்த
தருணத்தில் அவர்கள் செய்கிற ஒரு நிகழ்வினைத்தான் ”மடலூர்தல்” என்று நமது காவியங்கள் கொண்டாடுகின்றன...
அந்த காதலன் , பனங்குருத்தினால் செய்த ஒரு குதிரையை செய்து எடுத்துக்கொண்டுபோய் , தன் காதலியின் ஊருக்குள்ளே சென்று, அதன்மேல் அமர்ந்துகொண்டு , அந்த ஊரில் விளையாடும் சிறுவர்களை அழைத்து , அந்த குதிரையை ஊரிலுள்ள எல்லா தெருக்களின் வழியாகவும் இழுத்துக்கொண்டு போகச்செய்வானாம்... பனங்குருத்தானது , மிகவும் கூர்மையாகவும், அதன்மீது அமர்பவரின் தோலை அறுக்ககூடியதாகவும் இருக்குமென்பதால் , உடம்பெல்லாம் புண்ணாக, இரத்தக்களறியாய் காதலன் ஊர்வலம் வர, பார்ப்பவர்கள் அத்தனை பேரும் அவன்மீது பரிதாபப்பட்டு ,இரக்கம்கொண்டு அவனுக்காக, அந்த காதலர்களுக்காக , பெண் வீட்டாரிடம் பேசி மணம் முடிக்க முயற்சிப்பது தனிக்கதை.... !
”கலித்தொகையில் “” இந்த மடலூரும் காட்சிகளை நிறைய பாடல்களில் காணலாம்..
ஒரு பெண் கூட , ” பெண்ணாய் இருந்தாலும் என்ன , மடலூரி , என் காதலரை அடைவேன் “என்று சபதம் இட்ட காட்சியெல்லாம்கூட நம் இலக்கியங்களில் உண்டு....
இன்றைய காதலர்கள் கெட்டிக்காரர்கள்... ”மடலூரிப்”போவதை விடவும், சில “ மடல்களிலேயே” அப்பா,அம்மாவை மடக்கி காதலில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.... இல்லையா... ??!
இளம் காதலர்களே... திருக்குறளில் மூன்றாம் பாலில் உள்ள அதிகாரங்களை படியுங்கள்.. காதலின் இன்பத்தை, அந்த காதல் ரசத்தை , திருவள்ளுவர் சொன்னதுபோல , வேறு எந்த கவிஞனும் , இவ்வளவு சுவையாக, இனிமையாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே.... ??!!
உடலால் தீண்டுகிற இன்பத்தைவிடவும், உடல் விலகி இருக்க , உயிரால் தீண்டுகிற இன்பமே சுவை மிகுந்தது என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்...
::::எழுத்து இணையம் :::