-பைத்தியக்காரன் -
வாழ்க்கை முழுவதும் ஒரு நபரைப் புணர்வதற்கான விருப்பத்தையே நாம் காதல் என்ற பெயரில் அழைக்கிறோம். - நான்
நான் இந்த அத்தியாயத்தை எழுதுவதற்குத் தயங்குகிறேன். ஏனென்றால், பதிவயதினரால் புனிதமானதாகக் கருதப்படும் ஒரு விஷயத்தின் இரத்தமும், சதையுமான அங்கத்தை நான் வெளிப்படுத்தப் போகிறேன். ஆனால் நான் கண்டறிந்த உண்மையை எழுதுவதையும், ஆதரிப்பதையும் நான் என் கடமையாகக் கருதுகிறேன்.
எனக்குப் பதினெட்டு வயதாகும் போது நான் காதலை முதன் முறையாக உணர்ந்தேன். அவள் ஒல்லியாகவும், நடுத்தர உயரத்துடனும், செவ்விய வெண்மை நிறத்துடனும் இருந்தாள். நான் எதனால் அவளைக் காதலித்தேன் என்பதை நான் அப்போது அறியவில்லை. அவள் அந்த அளவுக்கு அழகியில்லை. அவளை விட சிறந்த அழகிகளை அதற்கு முன்பும் பின்பும் சந்தித்திருக்கிறேன். அவளது உடல் எனக்குள் மோகத்தை மூட்டவில்லை. நான் அழகானவன் என்று நான் கூறவில்லை. நான் கவர்ச்சியற்றவனாகவே இருந்தேன்.
காலங்கள் கடந்த போது எனது ஈடிபஸ் மனப்பான்மையே அக்காதலுக்குக் காரணமாக இருந்தது என்பதை உணர்ந்தேன். நான் சந்தித்த எந்தப் பெண்ணையும் விட, எனது தாயாரைப் போன்றே அவள் தோற்றமளித்தாள். அதனாலேயே நான் அவளைக் காதலித்தேன்.
காதலும் காமத்தின் இன்னொரு வடிவம் தான். காமத்தின் சில கொச்சையான பகுதிகளை நீக்கி விட்டு நாம் அதனைக் காதல் என்று அழைக்கிறோம். காதலைக் காமத்திலிருந்து பிரிக்க முடியாது. காதலின் நோக்கம் உடலுறவிலேயே இருக்கிறது. காதலர்கள் எப்போதும் தங்கள் இணையைத் தங்கள் சொத்து என்றே கருதுவார்கள். தங்கள் இணை தங்களைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என்று கருதுவார்கள். அந்த விருப்பம் நிறைவேறாத போது அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
காதல் முதலில் மன அடிப்படையிலான விருப்பத்திலிருந்தே துவங்குகிறது. காலங்கள் செல்லும் போது உடலின் மீதான ஆவலும், ஈர்ப்பும் வெளிப்படத் துவங்குகிறது. ஷாஜகானும், மும்தாஜ் மகாலும் கடந்த ஆயிரமாண்டுகளின் சிறந்த காதல் இணை என்று கருதப்படுகிறார்கள். மும்தாஜ் ஷாஜகானுக்குப் பதிமூன்று குழந்தைகளை ஈன்று விட்டு தனது பதினான்காவது பிரசவத்தின் போது மரணமடைந்தாள். காமம் என்பது காதலின் பிரிக்க முடியாத பகுதி என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
எனது காதலைப் பொறுத்த வரை நான் முதலில் உடலியல் ஈர்ப்பைப் பற்றி அறியாதவனாகவே இருந்தேன். பிற்காலத்தில் அவள் மீது எனக்கு உடலியல் ஈர்ப்பு ஏற்பட்டதைக் குறித்து நானே ஆச்சரியப்பட்டேன். ஆனால் அவளுக்கு என் மீது அப்படிப்பட்ட உடலியல் ஈர்ப்பு தோன்றியிருக்காது என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நான் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவனில்லை. பெண்கள் காமத்தைப் பற்றியும் கலவியைப் பற்றியும் எத்தகைய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எந்தப் பெண்ணாவது இதைப் பற்றித் துணிவுடன் எழுதினால் நான் அறிந்து கொள்வேன்.
நான் எனது முதற்காதலில் தோற்றுப் போனேன். நான் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவன் அல்ல; சிரிக்க சிரிக்க பேசுபவன் அல்ல; வேறு காரணங்களும் இருக்கக் கூடும். ஆனால் அவள் எதனால் என்னைப் புறக்கணித்தாள் என்பதை நான் அறியவில்லை.
::::எழுத்து, இணையம் :::
No comments:
Post a Comment