சுமார் 300 படங்களுக்கு மேல் நடனம் அமைத்த சினிமா டான்ஸ் மாஸ்டர் சலீம் (80) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சில நாட்களுக்கு முன் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, விஜயகாந்த் ஹிந்தியில் திலீப்குமார், ஜிதேந்திரா, தர்மேந்திரா, அமிதாப் பச்சன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் 78 படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். இளைமை ஊஞ்சலாடுகிறது` படத்தில், `தண்ணி கருத்திருக்கு` என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததுடன், அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் இருந்தார். சிவாஜிகணேசன் நடித்த `வியட்நாம் வீடு` படத்தில் இடம்பெற்ற `பாலக்காட்டு பக்கத்திலே`` என்ற பாடலுக்கும் சலீம் நடனம் அமைத்திருந்தார். கடைசியாக அவர், `கேப்டன் பிரபாகரன்` படத்தில் இடம்பெற்ற ``ஆட்டமா தேரோட்டமா`` என்ற பாடலுக்கு நடனம் அமைத்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் பணிபுரிந்துள்ளர். 20 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.
..சில ஆண்டுகளுக்கு முன் குங்குமம் இதழில் வெளியான ஒரு சோகமான நேர் காணலே இதுவாகும் .
..சில ஆண்டுகளுக்கு முன் குங்குமம் இதழில் வெளியான ஒரு சோகமான நேர் காணலே இதுவாகும் .
ஒரு நீளமான வீட்டின் பின்புறம் மாடிப்படியை ஒட்டிய ஒடுங்கிய சந்து. வீட்டின் பழைய பொருட்களைக் கொட்டி வைக்கும் அந்த வீட்டின் ஒதுக்குப்புறம் அதுதான். கந்தலான உடைகளோடு ஒடுங்கிக் கிடக்கும் அவரிடம் ‘‘சலீம் சார் இதுதான் நீங்க குடியிருக்கிற இடமா? என்றால் அவரிடம் பதிலேதும் இல்லை. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகின் கொடிகட்டிப் பறந்த டான்ஸ் மாஸ்டர் பி.ஏ சலீம் இப்போது தன் செல்ல பூனைக்குட்டி பேபியோடு வாழ்வது இந்த இடத்தில்தான். எம்.ஜீ.ஆர், சிவாஜி, என்.டீ.ஆர், ஜெயலலிதா, தர்மேந்திரா, ஜெயப்பிரதா, ஹேமமாலினி என கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பி.ஏ. சலீம். இன்று அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதமின்றி உறவுகளுமின்றி வாழ்கிறார்.செல்வமும் , செல்வாக்கும் கூடவே புகழ் கொடுக்கிற போதையும் எத்தனையோ மனிதர்களை வழுக்கி விழ வைத்திருக்கிறது. அடுத்த வேளை உணவுக்காய் கையேந்தி நிற்கும் பொழுதுகளில் சடுதியாய் மின்னி மறைகிறது கடந்த கால வசந்த வாழ்க்கை அப்படித்தான் பி.ஏ.சலீமிற்கும்.
‘‘ ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த பொற்சிலை என்கிற படம்தான் என்னோட முதல் படம். அதிலிருந்துதான் என்னோட சினிமா வாழ்க்கை துவங்குகிறது. என்னோட சொந்த ஊர் கேரளாவில் இருக்கிற கண்ணனூர் பெரிய வசதிகளோ வாய்ப்போ இல்லாத ஷியா பிரிவு முஸ்லீம் நான். நன்றாக டான்ஸ் ஆடுவேன் சினிமாவுக்கு வந்த போது பெரிய ஆளாக வருவேன் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததில்லை. சினிமாவுக்குப் போகணும் பணம் சம்பாதிக்கணும் ஒரு தடவை என்னோட புனிதக் கடமையான மெக்காவுக்குப் போகணும் என்கிற ஆசை எல்லாம் எனக்கு இருந்தது. ஒரு முஸ்லீம் மெக்காவுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதற்கு மூன்று விதிகள் இருக்கின்றன ஒன்று மெக்கா செல்வதற்கான வசதி இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமும், மனதைரியமும் இருக்க வேண்டும். இந்த மூன்றில் உடல் ஆரோக்கியமும், மனோதிடமும் என்னிடம் இருந்தது. ஆனால் பணம் இல்லை. மிகக் குறுகிய காலத்தில் எனக்கு செல்வமும் செல்வாக்கும் சினிமாவில் வந்து சேர்ந்தது. என உறவினர்களை எல்லாம் நான் மெக்காவுக்கு புனிதப் பயணம் அனுப்பி வைத்தேன். ஆனால் நான் செல்வதற்கான நேரம் எனக்கு அப்போது வாய்க்கவில்லை.
ஒரு நாள் கூட நான் சினிமாவில் ஓய்வாக இருந்ததில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிய்யா, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் எழுபதுகளில் இருந்த டாப் ஹிரோக்களுக்கு நான்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தேன். தமிழில் எம்.ஜி,ஆர்,சிவாஜி, ஜெயலலிதா, தெலுங்கில் என்.டீ.ஆர், மலையாளத்தில் பிரேம்நஷீர், மது, ஹிந்தியில் ஜித்தேந்திரா, தர்மேந்திரா, ஹேமமாலினி, ஜெயப்பிரதா என எல்லா பாப்புலர் நடிக, நடிகைகளின் படங்களுக்கும் நான்தான் டான்ஸ் மாஸ்டர்.1974&ல் எஸ்.ஏ. அசோகன் தயாரிப்பில் வெளியான நேற்று இன்று நாளை படத்தைத் தவிற மீதி எம்.ஜீ.ஆரோடு நடித்த எல்லா படங்களுமே ஹிட். சில சமயம் சலீம் இல்லை என்பதற்காக பாடல் எடுப்பதையே தவிர்த்திருக்கிறார் எம்.ஜீ.ஆர். அவரோட படங்களுக்கு விரும்பி என்னை நடனம் அமைக்க அழைப்பார் ஒரு தடவை இதய வீணை படப்பிடிப்புக்காக காஷ்மீர் போனோம். காஷ்மீரில் இருந்து திரும்பியதும் என்னோட வீட்டிற்கு ஒரு புத்தம் புதிய எம்.எஸ். ஆர் கார் வந்து நின்றது. ‘‘எம்.ஜீ,ஆர் உங்களுக்கு பரிசாக இந்தக் காரை அனுப்பியிருக்கிறார்’’ என்று வந்தவர்கள் சொன்னார்கள். கார் மட்டுமல்ல அந்தக் காரை ஓட்ட டிரைவரையும் நியமித்துக் கொடுத்தார். அப்போ அந்தக் காரின் விலை ஒரு இலட்சம் ரூபாய் இருக்கும். அப்போது எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் என்பது பெரிய பணமே கிடையாது. ஆனாலும் அந்தப் பரிசுதான் என்னோட வாழ்க்கையில் பெரிய பொக்கிஷமாக நான் மதித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் பிசியாக இருந்தேன். ஹிந்தியில் ஒரு படத்திற்கு ஒரு இலடம் ரூபாய் வரை சம்பளமும் தமிழில் ஐம்பதாயிரம் ரூபாய்வரையும் மலையாளம், தெலுங்கில் பத்தாயிரம் ரூபாயும் ஊதியம் கிடைக்கும். அப்போது அதிக ஊதியம் வாங்கிய டான்ஸ் மாஸ்டர் நான்தான்.’’ என்கிற பி.ஏ சலீம் தொடர்ந்து,
‘‘சென்னை உஸ்மான் சாலையில் இருக்கிற சாரி தெரிவில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுர அடி அளவில் பிரமாண்டமான மூன்று மாடி வீட்டைக் கட்டினேன். அதே நேரத்தில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், கானாத்தூரில் ஒரு பண்ணை வீடும், கோழிக்கோட்டில் என் உறவினர்களுக்கு பிரமாண்டமான வீட்டையும் கட்டிக் கொடுத்தேன். வசதி வந்தது, நண்பர்கள் வந்தார்கள், பெரிய மனிதர்களின் பழக்கங்கள் என கண்ணனூர் சலீம் உயரப்பறந்த காலமது. வாழ்க்கை என்பது பிரமாண்டத்தில் இருக்கிறது என்பதை நான் இன்று நம்பவில்லை. ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எனக்கு ஒரு பையன், பொண்ணு. மகனின் நான்காவது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடினேன். எம்.ஜீ.ஆர். ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர், ஹேமமாலினி என எல்லா பிரபலங்களையும் அழைத்து வர கோலாகலமான ஒரு திருவிழாவாக அதை நடத்தினேன். செலவுக்காக கானாத்தூரில் இருந்த நிலத்தையும், ஹைதராபாத் வீட்டையும் விற்றேன். அதன் பிறகு கூட நான் திரயுலகில் கொடி கட்டிதான் பறந்தேன். 1977&ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த பதினாறு வயதினிலே படத்தில் கூட நான் மாஸ்டராக வேலை செய்தேன். தொண்ணூறுகளில் வெளிவந்த பாலச்சந்தரின் அழகன் படம்தான் நான் வேலை செய்த கடைசிப் படம்.
எனக்கு அள்ளிக் கொடுத்த சினிமாவுக்கும் நடனத்துக்கும் நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சென்னை திநகர் பர்கிட் சாலையில் இடம் வாங்கி நடனம் கற்றுக் கொள்ளவும், நடன ஊழியர்களுக்காகவும் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தேன்.அந்த நிலத்தை வாங்கி கட்டி முடிக்க அப்போது இருபத்து நான்கு லட்ச ரூபாய்க்கு மேல் செலவானது. அந்தக் கட்டிடம் கட்ட எம்.ஜி.ஆர் பத்தாயிரம் ரூபாயும். எல்.எம் பிரசாத் ஐந்தாயிரம் ரூபாயும், டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்தாங்க மீதிப்பணத்தை நான் போட்டு அந்தக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தேன் இன்று அந்தக் கட்டிடம்தான் நடன இயக்குநர்களின் யூனியனாக இருக்கிறது. இப்போ என்னோட நிலையைப் பார்த்து விட்டு அவங்க மாதாமாதம் கொஞ்சம் காசு கொடுக்கிறாங்க. ஆனால் அதை வைத்து ஒரு மாதம் முழுக்க என்னால் சாப்பிடக் முடியவில்லை. இப்போ ஸ்டன்ட் மாஸ்டர் முஸ்தபாதான் எனக்கு இந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்து இல்லாதபோது உணவும் கொடுக்கிறார்’’ என்று சொல்லும் சலீமிற்கு சினிமா ஆசை மட்டும் இன்னும் போகவில்லை. அது எவளவு பெரிய கனவாக இருக்கிறது என்றால் ‘‘ நான் ஒரு சினிமா எடுக்கப் போகிறேன் சார். அதில் தர்மேந்திராதான் வில்லன். ரஜினிதான் ஹீரோ நல்லாயிருக்கும்ல சார்? ’’ என்று ரஜினியின் உயரம் தெரியாமல் அப்பாவியாகப் பேசுகிறார்.
கிட்டத்தட்ட 170 விருதுகள் வாங்கிய பி.ஏ. சலீமிடம் இப்போது எஞ்சியிருப்பது புகழின் உச்சியில் இருந்த போது பத்திரிகைகளில் வெளிவந்த மஞ்சள் கரை படிந்த சில பேப்பர் கட்டிங்குகள் மட்டுமே. ‘‘எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. விதி வந்து விளையாடிய விபரீத விளையாட்டுக்கு பலியாகியவன் நான்.என் மனைவி, மக்களைப் பார்த்துக் கிட்டத் தட்ட 14 வருஷமாச்சு. என்னோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள், என் மகன் வெளிநாட்டிற்குப் போய் விட்டதாகவும் தகவல். எனக்கு எதுவுமே தெரியவில்லை. வாழ்க்கையில் இன்னும் எனக்கு சில நம்பிக்கைகள் இருக்கிறது. நான் வாழ்வில் செய்ய நினைத்து செய்யாமல் விட்டது ஒன்றுதான் அது புனித மெக்கா பயணம். விரைவில் எனது வழக்கு முடிவுக்கு வரும் வெற்றி கிடைக்கும். நான் எனது புனிதக் கடமையான மெக்காவிற்குச் செல்வேன்’’ என்று பெருமூச்சு விட்டபடி தலைகுனிந்து அமர்ந்திருக்கும் சலீம் தனது செல்லப் பூனையின் தலையை வருடிக் கொடுக்கிறார்.
நன்றி – குங்குமம்.
No comments:
Post a Comment