மனித வாழ்வில் மாணவப்பருவம் மிக்க மதிப்புடையது. வயதுக்கும், அறிவுக்கும், கடமைக்கும் இணைப்புக் காட்டி முன்னோர்கள் மனிதனுடைய வாழ்வை நான்கு வகையில் பிரித்தார்கள். அவை
(1) இளமைநோன்பு
(2) இல்லறம்
(3) அகத்தவம்
(4) தொண்டு
என்பனவாகும்.
ஒன்றின்பின் ஒன்றாக முறையோடு இவற்றைப் பயிற்சி செய்வதற்காக வேறுபடுத்தியும், வரிசைப்படுத்தியும் பேசப்பட்டனவேயொழிய, வாழ்வில் பொறுப்பேற்ற ஒவ்வொருவருக்கும் இந்நான்கு பண்பாடுகளும் வாழ்வில் இணைந்தே செயலாக வேண்டும்.
மேலே விளக்கிய நான்கு பிரிவுகளில் இளமை நோன்பு என்ற ஒன்றைப் பயிலும் காலம்தான் மாணவப்பருவம் மனிதன் சிறப்புற, வாழ்வில் வளம்பெற இன்றியமையாத பருவமே எற்றதோர் பயிற்சிக்காலம்.
நல்வாழ்வின் இன்றியமையாத தேவைகளான
(1) எழுத்தறிவு
(2) தொழிலறிவு
(3) இயற்கை தத்துவ அறிவு
(4) ஒழுக்க பழக்கங்கள்
என்ற நான்கும் இணைந்த கல்வியே முழுக்கல்வியாகும். இவற்றைப் பயின்று கொள்ளவேண்டிய பொருத்தமான, இன்றியமையாத காலம் மாணவப் பருவமே. எழுத்தறிவு, தொழிலறிவு இரண்டும் இன்று விரிவாக எல்லாப் பள்ளிகளிலும் கல்வி முறையில் பாடத்திட்டங்களாக கற்றுத்தரப்படுகின்றன. இயற்கைத் தத்துவ அறிவும் செம்மையான வாழ்வுக்கு ஏற்ற ஒழுக்க பழக்கங்களும் அகத்தவத்தாலன்றிக் கிட்டாது. மாணவர்களுக்குப் படிப்பில் மனம் நிலைக்க, ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து பொருள் உணர, அவற்றை நினைவிலே வைத்துக்கொள்ள, போதிய மனவலுவு, கூர்மை, நுண்மை ஆகிய இவை அகத்தவம் (தியானம்) என்ற உளப்பயிற்சியினால்தான் கிடைக்கிறது.
உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் இந்நான்கின் நிலைகளையும் இவை ஒன்றோடொன்று இணைந்த உறவுகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும்போதுதான் ஒருவர் விஞ்ஞானம் கல்வியில் எந்தப் பகுதியிலும் சிறந்து விளங்க முடியும். பொருளியல், உயிரியல், உளவியல், கருவியியல், சமூக இயல் அகிய விஞ்ஞானங்கள் வேறு வேறாகத் தோன்றிய போதிலும் உண்மையில் இவை எல்லாவற்றிலும் ஊடுறுவிய தொடர்பு இருக்கிறது. இக்கல்விகளில் ஆழ்ந்து பொருளுணர்ந்து கருத்தோடும், பொறுப்போடும் கல்வியில் தேர்ச்சிபெற அகத்தவப்பயிற்சி இன்றியமையாத் துணையாகும். மேலும் மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல்களை முறைப்படுத்தவேண்டுமாயின் இளமைநோன்புக் காலமாகிய மாணவப்பருவம்தான் சிறந்தது அறிவு ஆற்றல் சிதறாமல், செயல்கள் நெறி பிறழாமல் ஒன்றோடொன்று இணைந்து சிறப்புற மாணவப் பருவத்திலேயே பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.
இப்பருவத்தை நழுவ விட்டால் தேவையற்ற துன்பமும், சிக்கலும் விளைவிக்கத்தக்க எண்ணங்களும், செயல்களும் இடம் பிடித்துக்கொள்ளும். பிற்காலத்தில் இவற்றை மாற்றி ஒழுங்குபடுத்தி நலம் காண்பதில் மிகுதியான முயற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் பழக்கமாகிவிட்ட எண்ணங்களையும், செயல்களையும் மாற்றியமைப்பது என்பது மிகக்கடினம். எனவே மாணவப் பருவத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு மனிதனும் சிறந்த ஆற்றலுள்ள நல்லதோர் நிதியாகத் திகழ வேண்டும் என்றால் மாணவப்பருவத்திலேதான் மனவளக்கல்வி இடம் பெறவேண்டும்.
ஒரு மனிதன் நற்பண்போடு வாழ்வில் சிறந்து விளங்கினால் உலகிற்கு, ஆயிரமாயிரம் மக்களுக்கு நலம் விளைக்கும் பெருநிதியாகத் திகழ்கிறான். இதே போன்று பருவத்தை நழுவவிட்டு புலன் வழியே சென்ற சூழ்நிலைக் கவர்ச்சிகளால் தேவையற்ற எண்ணங்களும், செயல்களும் இளம்வயதில் ஒருவரிடம் பதிந்து விட்டால் சமுதாய நலனையே அழிக்கக்கூடிய நச்சு ஆகிவிடுகிறது. மாணவப் பருவத்தில் அகத்தவம் பயின்று மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெறும்போது கல்வி நிலையங்களில் எவ்வகைக் குழப்பங்களும் ஏற்படாது. இதன் தொடர்விளைவாகத் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் திறமை மிகும் அமைதி நிலவும் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இவ்வாறு வாழ்வின் நெறியுணர்ந்து வாழ்ந்தால் சமுதாயத்தில் அரசியல் சிறப்புறும், பொருளாதாரம் வளம்பெறும்.
எழுத்தறிவு, தொழிலறிவு, இரண்டை மட்டும் வளர்த்துக் கொண்டு இயற்கை தத்துவம், ஒழுக்க பழக்கங்கள் இவற்றை அலட்சியம் செய்துவிட்டால் மனித சமுதாயத்தின் இன்ப ஊற்றே நச்சு ஆகிவிடும். வறண்டுபோகும்.
மாணவப்பருத்தில் அகத்தவம் புகுத்துவதற்கு மாணவர்கள் மட்டும் முயன்றால் போதாது, பெற்றோர்கள், மதத் தலைவர்கள், சமுதாய நல நோக்கமுடையவர்கள், ஆட்சித் தலைவர்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் அனைவருமே கூட்டுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த பெரு நோக்கத்தோடு சிந்தனை ஆற்றல் மிக்க சமுதாய நலநோக்கமுள்ள அனைவருமே மனித குல நலப்பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்