மஞ்சூரியன் என்பது சீன வகை உணவு. சைவம், அசைவத்திலும் மஞ்சூரியன் செய்யலாம். காரமான, புளிப்பான சாஸ் போல இருக்கும். ட்ரை, கிரேவி என இரண்டு வகையாக மஞ்சூரியன் செய்யப்படுகிறது. ஹோட்டல்களில் ப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்பவர்கள் சைடாக மஞ்சூரியன் சொல்ல மறக்கமாட்டார்கள். வீட்டிலேயே எளிதாக சிக்கன் மஞ்சூரியன் செய்யலாம் என கூறியுள்ளார் வில்லிவாக்கம் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ஹோட்டல் சமையல் கலைஞர். அவர் கூறும் ரெஸிபியை கேளுங்களேன்.
தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன்ப்ளவர் - 6 மேசைக்கரண்டி
மைதா – 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – கால் கப்
பூண்டு குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
மஞ்சூரியன் செய்முறை
கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.
பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். நீங்களும் செய்து பார்த்து அசத்துங்களேன்.
No comments:
Post a Comment