Tuesday, November 20, 2012

கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்! அறிவியல் ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்!

_ மனோசௌந்தர்_





    சாலையில் நடந்து செல்லும்போதுகூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை... தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். “அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்...வல்லுநர் குழுக்கள்...அணுசக்தி நிர்வாகத்தினர்...எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள். ஆனால், அணு உலை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் மிகப்பெரியக் கேள்விக்குறி! காரணம்...சர்வதேச அணுசக்தி கழகம், அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்தியாவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அணு உலை பாதுகாப்பாக இயங்க பரிந்துரைக்கும் விதிமுறைகளை கடைபிடித்து கூடன்குளம் அணு உலையை கட்டவில்லை என்பதுதான் திடுக்கிடும் உண்மை.

 
 ஆக, சர்வதேச தரத்திலும்...இந்தியத் தரத்திலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் கட்டப்பட்ட அணு உலையில் ஆபத்துவராது என்று எப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டால்... மன்மோகன் சிங்கின் மத்திய அரசும் ...மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும்... தமிழக அரசின் ஜெயலலிதாவும்... மத்திய மாநில அரசு அமைத்த வல்லுநர் குழுக்களும்  அறிவியல் ரீதியான பதிலை சொல்லாமல்... “ஆபத்து வராதுன்னா வராது”என்று வடிவேலு ஸ்டைலில் ஒரே பதிலை ஜோசியக்காரர்களைப் போலவும் கடவுள்களை போலவும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

  சர்வதேச அணுசக்தி கழகமும்.... அமெரிக்காவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் பாதுகாப்பான அணு உலையை அமைக்க விதிமுறைகளை மட்டுமே வகுக்கமுடியும். இன்னொரு நாட்டில் அமைக்கப்படும் அணு உலை குறித்து கேள்வி கேட்கமுடியாது. ஆனால், இந்தியாவிலுள்ள அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய விதிமுறைகளை மீறி இந்தியாவில் ஒரு அணு உலை கட்டப்பட்டால் அதுகுறித்து கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால், இதுவரை...விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கூடன்குளம் அணுஉலை குறித்து எந்த கேள்வியும் கேட்காமல் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து கவலைப்படாமல் அமைதி காக்கிறது.

  அதனால்தான், போராட்டக்குழு... மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரபல விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடக்கிய 28 பேர் கொண்ட வல்லுநர் குழு...கூடன்குளம் அணு உலையை சுற்றி அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் இறங்கியது. சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ள பகுதியில் அணு உலை அமைக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், கூடன்குளம் அணு உலையை பொறுத்தவரை அருகிலிருந்து சுனாமி உருவாகும் வாய்ப்பு இல்லை. செர்னோபில் விபத்து... ஃபுக்குஷிமா விபத்து போன்று இங்கு விபத்து நடக்கும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டது. போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவோ... “பிரபல விஞ்ஞானிகளான வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரீ இருவரும்  1982 ல்  செய்த ஆய்வில் சரிந்துசாயும் வண்டல் குவியல்கள் கூடங்குளத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதை தெரிவித்திருக்கிறார்களே. அவர்களின் ஆய்வுப்படி பார்த்தால் கூடன்குளம் அணு உலையை சுற்றி  ஒரு மிகப்பெரிய சுனாமியே உருவாகும் வாய்ப்புள்ளதே இதுபற்றி உங்கள் முதல் கட்ட அறிக்கையில் குறிப்பிடக்கூட இல்லையே என்று நாங்கள் கேட்டோம். வேறு வழியில்லாமல் மத்திய வல்லுநர்க்குழு தாங்கள் சொன்னதை திருத்தி...(எழுதியவர்... மத்திய அரசின் வல்லுநர் குழுவில் உள்ளே ஒரே ஜியாலஜிஸ்ட் ஹர்ஷ்.கே.குப்தா) “சுனாமியை உருவாக்கக்கூடிய சரிந்துசாயும் வண்டல் குவியல்கள்  இருப்பது உண்மைதான். ஆனால், முப்பது டிகிரிவரை மட்டுமே சாயும்  என்றும்...ஐந்து மீட்டர்ருக்குமேல் மட்டுமே சாயாது  என்றும்  அதனால் சுனாமி ஏற்படும் என்பது உண்மைதான் ஆனால், அணு உலையை அந்த சுனாமி  பாதிக்காது என்று வல்லுநர்க்குழு இரண்டாவது அறிக்கையில் குறிப்பிட்டது.

   சரிந்துசாயும் வண்டல் குவியல்கள் இருந்தால் அங்கு கெமிக்கல் அனலைசஸ் செய்யவேண்டும். ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை. அதில், களிமண் அதிகமாக இருந்தால் சீக்கிரம் சரிந்து சுனாமியை உருவாக்கும். 1981 ல் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுகுழுமம் (Oil and Nechural Gas Commission) என்ற பொதுத்துறை நிறுவனத்தின் விஞ்ஞானி சாஸ்திரி  செய்த ஆய்வில் கூடன்குளம் பகுதியில் உள்ள சரிந்துசாயும் வண்டல் குவியலில் களிமண் இருப்பதை உறுதி செய்திருக்கிறாரே... அப்படியிருக்க சுனாமி வராது என்று நீங்கள் எந்த அறிவியல் ஆராய்ச்சியின் மூலம்  குறிப்பிடுகிறீர்கள்? என்று கேட்டால் மத்திய வல்லுநர்க்குழுவிடமிருந்து அறிவியல் பூர்வமான பதில் இல்லை.

   அடுத்து...அணு உலை துவங்கப்போகும் இடத்துக்கு அருகிலுள்ள நிலப்பிளவுகள் குறித்து ஆய்வு செய்யவேண்டும். மத்திய அரசின் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவின் ஆய்விலேயே இந்திராணி நிலப்பிளவு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த நிலப்பிளவில் 100 ஆண்டுகாலத்திற்குள் எத்தனை தடவை நிலநடுக்கம் வந்துள்ளது என்பதையும்... இந்த நிலநடுக்கம் சரிந்து சாயும் வண்டல் மண்குவியல்களில் பாதிப்பை ஏற்படுத்தி சுனாமியை உண்டாக்கிவிடுமே? கடந்த 2011 நவம்பர் 19ந்தேதி 5.2 ரிக்டர் அளவுகோலில் இந்திராணி நிலப்பிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை ஜி.எஸ்.ஐ. பதிவு செயிதிருக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை  குறித்தும் ஆய்வு செய்யவில்லையே ஏன்? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.


உண்ணாவிரத போராட்டத்தில் உதயகுமார்


  சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் அருகில் எரிமலை வாய்(முகடுகள்) இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். மத்திய வல்லுநர்குழு தனது 38 பக்க முதல் அறிக்கையில் இதுபற்றி எதையுமே எழுதவில்லை. கொச்சியில் இயங்கும் இந்திய கடற்படையின் இயற்பியல்  மற்றும் கடலியல் ஆய்வுச்சாலையை சேர்ந்த ஜி.ஆர்.கே. மூர்த்தி, ஒய்.சத்யநாராயணா மற்றும் டி.பிரதீப் குமார் ஆகியோரே செய்த ஆய்வில் மன்னார் வளைகுடாவில் இரண்டு இடங்களில் எரிமலைகளின் முகவாய்கள் இருப்பதாக  (1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்) பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல்... இந்தப்பகுதியில் கடல் எரிமலைகள் உள்ளன என்று 1975 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் முன்னணி நிலவியலாளர் உடிண்ட் சேவ் என்பவரும் 1981 ல்  இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுகுழுமத்தின் சாஸ்திரி ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபிறகு மத்திய வல்லுநர்க்குழு இரண்டாவது அறிக்கையில் எரிமலை இருப்பது உண்மைதான். ஆனால், வெடிக்காது என்று சொல்கிறார்கள்.

 தானே புயல்போன்று கூடன்குளம் அணு உலைக்கு அருகில் வந்தால் சரிந்துசாயும் வண்டல் குவியல்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்தீர்களா? என்று கேட்டாலும் பதில் இல்லை.

  அணு உலையை குளிர்விக்கவேண்டுமென்றால் கடல் நீரை எடுத்து உப்பு நீக்கி பயன்படுத்துவார்கள். கூடங்குளம் அணு உலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் தண்ணீரை உறிஞ்சும் குழாய் இருக்கிறது. அந்த இடத்தில் திடீரென்று கடல் உள்வாங்கிக்கொண்டால் அணு உலையை குளிர்விக்க தண்ணீர் கிடைக்காமல் அணு உலையே வெடித்துவிடும் அபாயம் இருக்கிறதே. இப்பகுதியில்  வருடத்திற்கு மூன்று முறை அப்படி கடல் உள்வாங்கியிருக்கிறதே அதுகுறித்து ஆய்வு செய்தீர்களா? அணு உலையை தொடர்ந்து குளிர்விக்க 6 கோடி லிட்டர் தண்ணீர் சேமித்துவைத்திருக்கவேண்டும். ஆனால், 1.2 கோடி லிட்டர்தான் சேமிப்பில் வைத்திருக்கிறீர்கள் இதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கு என்ன செய்வீர்கள்?

  கூடங்குளம் அணு உலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று முறை கார்ஸ்ட் குழிவு எனப்படும் விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட விபத்து திரும்பவந்தால் அணு உலை அப்படியே பூமிக்குள் அமிழ்ந்துவிடும் அபாயம் இருக்கிறதே என்று நாங்கள் சொன்னபிறகு  கார்ஸ்ட் பாதிப்பு இருக்கிறது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட ஆபத்துவராது என்கிறார்கள் மத்தியக்குழு வல்லுநர் குழுவினர்.

   கூடன்குளம் பகுதியில் கடந்த பதினைந்து வருடங்களாக குறைந்த அளவு எரிமலை வெடிப்புகள் நான்குமுறை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பூமியின் உள்ளே எரிமலை குழம்பு வெடித்துப் பிதுங்கி மேல் எழுந்து வந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம்... அணு உலை அமைந்துள்ள பகுதியில் பூமி மேலோட்டின் தடிமன் 40,000 மீட்டர் இருக்கவேண்டும். ஆனால், கூடன்குளம் அமைந்துள்ள பகுதியின் பூமி மேலோடு...150 மீட்டர் தடிமன்தான் உள்ளது. இப்படிப்பட்ட பகுதிகளில் அணு உலை அமைத்தால் மிகப்பெரிய ஆபத்து. இதுறித்தும் ஆய்வு செய்யவில்லை.

   கூடன்குளம் அமைந்துள்ள பகுதி...கடினப்பாறை மட்டுமே உள்ளது என்று தவறான ஆய்வை மனதில் கொண்டு அணு உலையை கட்டிவிட்டார்கள். ஆனால், தோண்டிப்பார்த்தபோது நடுநடுவே லேசான பாறைகள் உள்ளதை கண்டறிந்த சென்னை ஐ.ஐ.டியின் விஞ்ஞானி பூமிநாதன் 2004 கரண்ட் சயின்ஸ் பத்திரிகையில் முதலிலேயே கண்டுபிடித்திருக்கவேண்டுமே இப்படியிருந்தால் அணு உலைக்கு ஆபத்தாயிற்றே என்று வெளிப்படையாகவே திட்டியிருக்கிறார். இதில் பிரச்சனை என்னெவெனில் மிருதுவான பாறைகள் கடினமான பாறைகளுக்குள் இருக்குமானால் நில அதிர்வின்போது பாதிப்பு அதிகமாக இருக்கும்.

   
முதலில் கூடங்குளம் அணு உலை 2006 வரையிலான திட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தார்கள். அப்போதுதான்... எங்கள் குழுவில் உள்ள டாக்டர் ரமேஷ் அங்கு சென்று ஆய்வு செய்தார். பேச்சிப்பாறையில் எவ்வளவு கொள்ள்ளவு தண்ணீர் உள்ளது? மணல் படிதலின் காரணமாக எவ்வளவு தண்ணீர் குறைந்துள்ளது? சராசரி மழை எவ்வளவு? என்றெல்லாம் கணக்கெடுத்துவிட்டு... “ஒரு அணு உலை 40 வருடங்கள் இயங்கும். அதனால், அதுவரை பேச்சுப்பாறை அணையின் தண்ணீர் அணு உலைக்கு பத்தாது” என்று ஆய்வறிக்கையில் சொன்னபிறகுதான்... பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை மாற்றி... கடல்நீரை உப்புநீக்கி குளிர்விக்கப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துக்கு மாறினார்கள் அணு உலை நிரிவாகத்தினர். அதே டாக்டர் ரமேஷ் உள்ளடக்கிய வல்லுநர்க்குழுவினர்தான் மேற்கண்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், கஷ்டப்பட்டு ஆய்வு செய்து நாங்கள் சொன்னதும் வேறு வழியில்லாமம் ஒத்துக்கொள்ளும் மத்திய அரசின் வல்லுநர் குழு...ஆபத்து இருக்கு... ஆனா ஆபத்துவராது என்று ஜோசியர்களை போலவும் கடவுள்களைப்போலவும் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?  சர்வதேச அணுசக்தி கழகம்,  மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு வாரியம் (ஏ.இ.ஆர்.பி) சொன்ன வழிமுறைகளின் படி... அணு உலையை அமைத்திருக்கிறோம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டு அணு உலையை தாராளமாக திறந்துகொள்ளுங்கள். கூடங்குளம் அணுஉலையும் மத்திய வல்லுநர் குழுவின் அறிவியலற்ற அணுகுமுறையும் என்கிற புத்தகத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கான முழு ஆதாரங்கள் உள்ளன. இந்த வகையில் பார்க்கும்போது உதயக்குமார் தலைமையிலான போராட்டம் நியாய”மானதே” என்கிறார் போராட்டக்குழு நிர்ணயித்த வல்லுநர்க்குழுவில் ஒருவரான மக்கள் மருத்துவர் புகழேந்தி.


:::::thanks:::: Nakkheeran::::::::::::::::::::::::::::

No comments:

Post a Comment