தமிழ்நாடு திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் புகழரசி, ஜெகதீஸ்வரி, பரத்குமார், சதீஷ், சந்துரு ஆகியோர் கோழிக்கழிவில் இருந்து எரிவாயு தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர் ஆசிரியை சுமதி செங்குட்டுவன்.
தங்கள் கண்டுபிடிப்பு குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 5 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. திருப்பூரில் 300 கோழிக்கறிக்கடைகள் உள்ளன. இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.
கழிவுகள் சரியாக அகற்றப்படாததால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீமைகளை அறிந்தோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றோம். அதற்கு ஏற்ற வகையில் கழிவுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று 3 மாத காலம் ஆய்வு மேற்கொண்டோம்.
இதன் மூலம் எரிவாயு உற்பத்தி செய்ய முடியும் என்று அறிந்தோம். ஒரு கோழியில் இருந்து 400 கிராம் கழிவு வருகிறது. இதில் 300 கிராம் கால், தலை குடல் ஆகும். 100 கிராம் இதனுடைய இறக்கைகள். பண்ணைக்கழிவாக 20 கிராம் ஒரு கோழியிலிருந்து கிடைக்கிறது. பண்ணைக் கழிவுகளை நேரடியாக மண்ணில் உரமாக பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அதில் மீதேன் வாயு அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் தார்ப்பாய் பையை உபயோகித்து எரிவாயுவை உற்பத்தி செய்தோம்.
எங்கள் ஆய்விற்காக மாட்டுச்சாணம் (10 கிலோ), சர்க்கரை (1 கிலோ), கழிவுகள் (பண்ணைக் கழிவுகள், கோழிக்கழிவுகள் (40 கிலோ), தண்ணீர் 40 லிட்டர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டோம். முதலில் நாங்கள் 5-7 கிலோ சாணமும், அதனுடன் 5-7 லிட்டர் தண்ணீர் மற்றும் 1 கிலோ சர்க்கரையையும் சேர்த்து தார்ப்பாய் பையினுள் ஊற்றினோம்.
பிறகு அதனை வெயிலில் வைத்தோம். பின்னர் 2 மற்றும் 3-வது நாளில் கோழிக்கழிவுகளையும், பண்ணைக் கழிவுகளையும் ஊற்றினோம். 6-வது நாளில் அந்த பை பலூன் போன்று உப்பியிருந்தது. அதை வைத்து வாயு உற்பத்தியாகிவிட்டது என்பதை கண்டறிந்தோம்.
இந்த பையுடன் அடுப்பைப் பொருத்தி ஒரு சிறு எரியும் காகிதத்தை வைத்து எரியவைத்தோம். அது 20 முதல் 25 நிமிடம் வரை தண்ணீர் காய்ச்ச உதவியது. திருப்பூரில் நாள் ஒன்றிற்கு கோழிக்கழிவுகள் 6 ஆயிரம் கிலோ, பண்ணைக் கழிவுகள் 60 லட்சம் கிலோ கிடைக்கிறது.
இதை பயன்படுத்தி 4 மணி நேரத்திற்கு 50 ஆயிரம் வீடுகளுக்கு எரிவாயு பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம். திருப்பூரில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதனை உபயோகிக்க முடியும்.
இந்த ஆய்வறிக்கையை நாங்கள் சென்னையிலுள்ள சைன்ஸ் சிட்டிக்கு சமர்ப்பிக்க போகிறோம். மேலும் ஐரோப்பாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் லெவலில் ஆய்வறிக்கை அறிவியல் போட்டியிலும் சமர்ப்பிக்கப் போகிறோம்.
அரசாங்கத்தினர் எங்கள் முயற்சியை மேற்கொண்டால் இப்போது இருக்கும் எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும்.
:::::::::::::::மாலைமலர்::::::::::::::
No comments:
Post a Comment