எலக்ட்ரிக் கார்கள் என்றவுடன் மதமதவென பிக்கப், கொஞ்சம் அதிக தூரம் செல்ல வேண்டுமெனில் கூட வயிற்றில் நெரு்பபை கட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற பழைய தொழில்நுட்ப பல்லவிகளை உடைத்தெறிய இருக்கிறது படத்தில் நீங்கள் காணும் உலகின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் கார்.
இதுவரை சூப்பர் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே சூப்பர் கார்கள் சீறிப்பாய்ந்து வரும் நிலையில், கான்செப்ட் ஒன் என்ற இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் மோட்டார்களின் உந்து சக்தியுடன் சீறிப்பாயும் திறன் கொண்டது. இந்த எலக்ட்ரிக் சூப்பர் காரை குரோஷியாவை சேர்ந்த ரிமேக் ஆட்டோமொபைல் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் விரைவில் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது. தற்போது கான்செப்ட் நிலையை விட்டு மெல்ல உற்பத்தி நிலைக்கு மாறும் தருவாயில் இருக்கிறது.
அது சரி, புகாட்டி வேரோன் உள்ளிட்ட அதிவேக சூப்பர் கார்களுடன் இந்த எலக்ட்ரிக் கார் போட்டி போட முடியுமா? என்ற உங்கள் மனதில் எழும் ஐயம் புரிகிறது. இந்த சூப்பர் காரின் நான்கு சக்கரங்களிலும் உடனடி உந்து சக்தியை அள்ளித் தரும் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
4 எலக்ட்ரிக் மோட்டார்களும் சேர்ந்து அதிகபட்சம் 1,088 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். காலை ஆக்சிலேட்டரில் காட்டினால் போதும், வாலை கிளப்பி செல்லும் காளை போல சீறுகிறது. வெறும் 0-60 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்சம் மணிக்கு 300கிமீ வேகம் வரை செல்லும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த எலக்ட்ரிக் சூப்பர் கார் 600 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. பிரேக் ஆற்றல் விரயமாவதை சேமிக்கும் தொழில்நுட்பமும் உண்டு. முழுவதும் இலகு எடை மற்றும் உறுதியான கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1950 கிலோ எடை கொண்டது. லித்தியம் அயான்-பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் கார் கான்செப்ட் எதிர்கால சூப்பர் கார் தயாரிப்பு தொழில்நுட்பத்துக்கு முன்னோடியாக இருக்கும் என இதனை வடிவமைத்த ரிமேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 88 கார்கள் மட்டுமே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment