Thursday, August 9, 2012

Virtual Reality in Operations | மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்!



மருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை படைக்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து, அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஆபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பரிசோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவும் என்பதும் மருத்துவ தரப்பின் கணிப்பு. இந்த முறை விர்சுவல் ரியாலிட்டி தெரபி எனப்படும். 

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு இது. புதிய முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இந்த முறையில் நோயாளிகளின் முகத்தில், கண்கள் விளையாட்டை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் மாஸ்க் போன்ற சாதனம் பொருத்தப்படும். வீடியோ கேம் விளையாடத் தெரியாதவர்களும் இதை எளிதாக கையாள முடியும். இதன் மவுஸ் அவர்கள் கைகளில் இருக்கும். முதலில் அவர்கள் கவனம் முழுவதும் விளையாட்டில் செலுத்தப்படும். ஒரு கட்டத்தில் அவர்கள் விளையாட்டில் ஊன்றிவிடுவர். ஸ்னோ வேர்ல்ட் என்ற பெயரில் லோ இம்மர்ஷன், ஹை இம்மர்ஷன் என 2 வகை விளையாட்டுகள் உள்ளன. இந்த முறையில் ஆபரேஷனின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளுக்கு வீடியோ விளையாட்டுகள் நிர்ணயிக்கப்படும். 60 வயதை கடந்த 25 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷனால் தங்களுக்கு வலி இல்லை என்றே அவர்கள் தெரிவித்தனர்.

விர்சுவல் ரியாலிடி என்ற தெரபி முறையில் நோயாளிகளுக்கு ஆபரேஷன் மேற்கொள்ளப்படும்போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க புதிய முறையில் அவர்களின் கவனம் வேறு செயல்களில் திருப்பப்படும். உதாரணமாக, அவர்களை வீடியோ கேம் விளையாட வைத்து அதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும்போது ஆபரேஷன் மேற்கொள்ளப்படும். வலியை அவர்கள் உணர்வதில்லை. ஆபரேஷன் செய்யும் நேரமும் மிகவும் குறைவு என்கிறார் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சாம் ஷரர்.

No comments:

Post a Comment