Thursday, August 9, 2012

அருமையான...தட்டைபயறு குழம்பு

                                           Moth Beans Curry



தட்டைபயறு குழம்பு மிகவும் ருசியாக இருப்பதோடு, அதை வீட்டில் செய்தால், அனைவரும் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவர். ஏனெனில் அந்த அளவு அதன் சுவை இருக்கும். அதிலும் பயறு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலும் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய பயறுவகைகளில் ஒன்றான தட்டைபயறை வைத்து குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
தட்டைபயறு 1/4 கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
தேங்காய் 1/4 மூடி
சீரகம் 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
புளி சிறிது
நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் தட்டைபயறை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, தேங்காயை துருவிக் கொள்ளவும். பின் வெங்காயத்தில் பாதியை ஒரு மிக்ஸியில் போட்டு, அதோடு சீரகம் மற்றும் துருவிய தேங்காயை போட்டு நன்கு நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கியதும் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, ஒரு முறை கிளறி கொள்ளவும். பின் அதில் வேகத்துள்ள தட்டைபயறை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி, ஒரு முறை கொதிக்கவிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான தட்டைபயறு குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment