கால் சென்டர்களிலும், ஐ.டி. நிறுவனங்களிலும் பெரும்பாலும் இரவு நேரப் பணிகள்தான் அமைகின்றன. மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இளைய தலைமுறையினர். அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ வீடுதிரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது.
சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் சரியாக தூங்காமல் இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர். 5 சதவிகிதம் பேருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. 41 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம், நரம்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 2மில்லியன் நபர்களிடம் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
இப்போதைய இயந்திர வாழ்வில், சமச்சீரான உணவுகளை தவிர்த்து விட்டு, துரித உணவு, உடல் பயிற்சியின்மை காரணத்தால் சிறுவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவை 2 மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது. சரியான தூக்கமின்மை, ஓய்வு இல்லாமல் உழைப்பது, மனஉளைச்சல், நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் பிரபல இதயநோய் நிபுணர்கள்.
இப்போதுள்ள ஐ.டி மற்றும் பி.பீ.ஓ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால்
தூங்காமல் முழித்து இருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே, குழந்தை பருவத்தில் இருந்தே அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் புரதம், விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட கொடுக்கவேண்டும் உணவில் பச்சை காய்கறிகள் மற்றும்
பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அரிசி சாதத்தை குறைத்து கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம், மனஅழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
குழந்தைகள் ஓடியாடி விளையாட்ட வேண்டும். . நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராகும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மாடி ஏற படிகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment