”வல்லமை” இணைய இதழில் வெளியானது:
பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அரசு மருத்துவச் சமூக ஆர்வலர் ஒருவர் வந்திருந்து, தொழுநோய்க்கான விளக்கவுரை நிகழ்ச்சி நடத்தினார். உரை முடிந்ததும், கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கூறவும், பலரும் பல கேள்விகள் கேட்டனர். அமுதா என்கிற என் சக மாணவி, “இந்நோய் வந்தால் வலி இருக்காதா?” என்று கேட்டாள். “நல்ல கேள்வி” என்று மிகவும் சிலாகித்துப் பாராட்டிச் சொன்ன அவர், எல்லாரையும் கைதட்டவும் சொன்னார். எனக்கோ இந்த கேள்வியில் பாராட்டுமளவு அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று வியப்பாக இருந்தது.
அவர் தொடர்ந்தார், “எந்த ஒரு நோய்க்குமே வலிதான் அதன் முதல் அறிகுறியாக இருக்கும். அதை வைத்துத்தான் நாம் எச்சரிக்கையடைந்து உடனே சிகிச்சை எடுக்க மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இந்தத் தொழுநோய்க்கு மட்டும் வலி என்பதே கிடையாது. வலி இல்லாததாலேயே, இந்நோய் தாக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருந்து விட நேரிட்டு, நோய் முற்றிக் குணப்படுத்தச் சிரமமான நிலைக்குச் சென்று விடுவதால் கை, கால் விரல்களை இழந்து விடுகிறார்கள்” என்று கூறினார். சட்டென்று பிடிபடவில்லை என்றாலும், ‘உக்காந்து யோசித்த’போதுதான் வலி என்பது நமக்கு ஒரு வரமே என்பது புரிந்தது.
சமீபமாக விகடனில் ஒரு கதை வந்தது, “வலி” என்ற தலைப்பு என்பதாகத்தான் ஞாபகம். கிராம மக்களைப் பலவித அடி, உதை என்று சித்ரவதை செய்து, வலிக்கு அஞ்ச வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பண்ணையாருக்கு, வலி என்கிற உணர்வே இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த உணர்வு இல்லாததால் அக்குழந்தை படும் பாடுகள் விவரிக்கப்பட்டு, அவர் தன் குழந்தைக்கு ‘வலி’ கிடைக்க வேண்டி மருத்துவர்களையும் தெய்வங்களையும் வேண்டி அலைவதாகப் போகும் கதை.
உடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது நமக்கு ஏதேனும் ஒரு சிரமத்தைத் தராத வரை அப்பாதிப்பை நாம் அறிய மாட்டோம். அது தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, காதுவலி என்று ஏதேனும் ஒரு வலியாக ரூபமெடுக்கும்போதுதான் அதனைக் குறித்து யோசிப்போம்.
உதாரணமாக, உயர் இரத்த அழுத்த நோய். இதன் இன்னொரு பெயரே “சைலண்ட் கில்லர்” என்பதுதான். ஆரம்ப நிலையிலோ, சற்று முற்றிய நிலையிலோ இதனால் எந்தப் பாதிப்பும் வெளிப்படையாகத் தெரியாது. மிகவும் முற்றிய நிலைக்குச் சென்ற பின்னர் வாதம், சிறுநீரகப் பாதிப்பு முதற்கொண்டு கோமா உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்திய பின்பே பி.பி. வந்திருப்பதைக் கண்டறிய முடியும். இதுபோலவே சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஆரம்ப கட்டங்களில் வலி இன்மையால் கண்டறிவது தாமதப்படும். ஏன், கேன்ஸர் கூடச் சிலருக்குக் கடைசி நேரத்தில் கண்டறியப்படுவது இந்த வலியின்மையால்தானே?
இன்னொன்று, வலி ஏற்பட்டாலும், அதற்குச் சுய மருத்துவம் செய்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதுகுவலி என்றால், எடு ஒரு ப்ரூஃபனை; தலைவலியா இந்தா ஒரு பெனடால்; சளிக்காய்ச்சல்தானே, ஒரே ஒரு ‘அட்வில்’ போதுமே என்று நாமே திறமையான மருத்துவர்களாக இருக்கிறோம். இது பெண்களுக்கே மிக மிகப் பொருந்தும் என்றாலும், ஆண்களும் பல சமயங்களில் இதில் பெண்களுக்கு நிகராகவே அலட்சியமாக இருக்கின்றனர்.
இன்றைய சூழலில், ஒரு நெடும் பயணம் செய்து அலுவலகம் சென்று, வீடு வந்து சேருவதற்குள் அலுத்துச் சலித்துப் போய் விடுகிறது. அதற்கு மேல், மருத்துவமனைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து மருத்துவரைப் பார்க்கவும், பரிசோதனைகள் செய்யவும் எரிச்சல்பட்டு “தினம் பைக்கில் போய்ட்டு வரதுனால வர்ற முதுகுவலிதான். ரெண்டு நாள் ப்ரூஃபன் சாப்டுக்கிட்டாச் சரியாயிடும்” என்கிற சமாதானங்களால் மனசைத் தேற்றிக் கொள்கிறோம்.
ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, “நோய்முதலும்” – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.
அதை விடுத்து, ”இது ஒண்ணுமில்லை; ஒரு மாத்திரையப் போட்டுட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா வலி சரியாய்டும்” என்றே சொல்லிக்கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால், குடலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுக் கூடுதல் விளைவுகளைத்தான் இழுத்துப் போட்டுக் கொண்டதாக ஆகிவிடும். வலி மருந்துகளின் விளைவுகள் மிகக் கடுமையானவை. இவற்றை அதிகமாக, தக்க அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்வதென்பது நம் சிறுநீரகத்தை நாமே அழிப்பதற்குச் சமம்.
“இல்லை, நாங்கல்லாம் ஆயின்மெண்ட்தான் தடவுறோம். மாத்திரைலாம் சாப்பிடுறதேயில்லை தெரியுமா” – இப்படிப் பெருமையாகச் சொல்லிக்கிறீங்களா? வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்கள் எல்லாமும் கூடத் தொடர்ந்து வழமையாக உபயோகிக்கக் கூடாதவையே!!
வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்களினால் ஏற்படும் விளைவுகள் குறைவாக இருக்குமென்று சொல்லமுடியாதபடிக்கு, இவையும் சரும அரிப்புகள், அல்சர், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு தருபவையாக இருக்கின்றன.
பயமுறுத்துவதாகத் தோன்றுகின்றதா? இல்லை, நம்மில் பலரும் இந்த வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியத்தை அறியாதவர்களாக இருக்கிறோம். அறிந்திருந்தாலும், நேரமின்மை, வேலைப்பளு, இன்னபிற காரணங்களின்மீது பழியைப் போட்டுவிட்டு இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதனை அதிகமாகச் செய்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்திற்காக ஓடாய்த் தேயும் பெண்கள், தம் நலன் என வரும்போது ‘அடுத்த வாரம் பார்க்கலாம்’; ‘பசங்களுக்கு லீவு வரட்டும்’ என்றே தள்ளிப் போட்டு விடுகின்றனர்.
ஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழுக் குணமடையவேண்டுமேயல்லாது; தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப்பட வேண்டாமே.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதை நம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்களிடமும், தெருவில், அண்டை அயலில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்!! பெண்கள் நலன் காப்போம்!!
............
No comments:
Post a Comment