Thursday, August 29, 2013

”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"

ஹுஸைனம்மாவின் பக்கங்களிலிருந்து .....






சிறுவயதில் படித்த கல்கண்டு வார இதழில் லேனா தமிழ்வாணன் ஒருபக்கக் கட்டுரைகள் எழுதி வந்தார்.  நல்ல அறிவுரைகளை, சுவாரசியமான நடையில் எழுதுவதால், பல மனதில் இறுக்கமாகப் பதிந்ததுண்டு. அவற்றில், “பிள்ளைகளிடம் நீங்கள் ஏதேனும் வாக்கு கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். “ஆமா, நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுவே, ஆனா செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டால் அது பெற்றோராக நீங்கள் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது” என்பதும் ஒன்று.

இதையே பின்னாட்களில் ஹதீஸ் புத்தகங்களில் நபிகளாரின் அறிவுரையாகவும் கண்டேன்:  ஒரு சிறுவனை,   அன்னை ”இங்கே வா, நான் உனக்கு ஒன்று தருகிறேன்” என்று அழைத்தபோது நபி(ஸல்) அவர்கள் ”அவ்வாறு அழைத்துவிட்டு, அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள்” என்று கூறினார்கள். 

ஆனால், வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்வது; அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா மகனுக்கு பாக்கெட் மணி தருவது என, பெற்றோர்களின் பொய்களைக் கேட்டு வளரும் குழந்தைகளும் பொய் சொல்லுவது தவறில்லை என்று எடுத்துக் கொள்கின்றனர்.  அப்பெற்றோர்களும், “என்னிடம் பொய் சொல்லாத வரை சரி” என்று அதைக் கண்டுகொள்வதில்லை. 

இந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் எல்லா குற்றங்களுக்கும் ஆதாரஸ்ருதியாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதே இல்லை. 


திருந்தி வாழ நினைத்த ஒருவன், அதற்கான வழியைத் தேடியபோது, அவனிடம் ஒருவர் “எது வேண்டுமோ செய்துகொள். பொய் மட்டும் சொல்லாமலிரு.” என்றாராம்.  ”வாய்மை” என்ற தலைப்பில் ஓர் அதிகாரம் எழுதியுள்ள வள்ளுவரும் இதையே சொல்கிறார்:

”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"                         
”பொய்யுரைக்காமையை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும்;  மற்ற அறங்கள் செய்யத் தேவையில்லை”  என்று திருவள்ளுவர் எடுத்துரைப்பதிலிருந்து தெரியவருவது: ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும்.  தவிர்த்தால்,  நல்வாழ்வின் தொடக்கம்.

...................
நன்றி : ஹுஸைனம்மா

No comments:

Post a Comment