இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் (47). இவர் நாசாவில் பணிபுரிகிறார். கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி கஜகஸ்தானில் இருந்து ரஷியாவின் சோயுஷ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
இவருடன் அகி ஹோசிடே (ஜப்பான்), யூரி மாலன் சென்கோ (ரஷியா) ஆகிய 2 வீரர்களும் சென்றனர். இவர்கள் அங்கு ஆய்வு பணியை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் கமாண்டர் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்று திறம்பட பணியாற்றினார். அப்போது பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட எந்திரங்களையும் பொருத்தினர். அங்கு இவர்களது பணி முடிந்தது.
இதைத் தொடர்ந்து பூமிக்கு திரும்பும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அதற்கு முன்னதாக நாசா வின்வெளி வீரர் கெவின் போர்டிடம் சர்வதேச விண்வெளி மைய ஆய்வு கூடத்தின் கமாண்டர் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஒப்படைத்தார்.
தனது பணி முடிந்ததை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் சோயுஷ் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.56 மணிக்கு இவர்களது சோயிஷ் விண்கலம் கஜகஸ்தானில் தரை இறங்கியது. இதைத் தொடர்ந்து, சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார். அவருடன் அகி ஹோசிடே, யூரி மலென் சென்கோ ஆகியோரும் வந்து சேர்ந்தனர்.
இவர்கள் கடந்த 127 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளனர். அதில், 125 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் தங்கியிருந்தனர். சுனிதா வில்லியம்ஸ் குழுவை தொடர்ந்து தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் கெவின் போர்டு தலைமையிலான 3 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் வருகிற டிசம்பர் வரை அங்கு இருப்பார்கள்.
டிசம்பர் 19-ந்தேதி நாசா விண்வெளி வீரர் டாம் மார்ஷ்பன், கிறிஸ் ஹேடுபீல்டு (கனடா), ரோமன் ரொமானென்கோ (ரஷ்யா) ஆகிய 3 பேர் ரஷியாவின் பைகானாவில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர். இவர்கள் அங்கு சென்றடைந்ததும் கெவின் போர்டு தலைமையிலான குழுவினர் பூமிக்கு திரும்புவர்.
:::::::::::::::::மாலைமலர்:::::::::::::::::
No comments:
Post a Comment