மழைக்காலம் ஆரம்பம் ஆனாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.
ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால். இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன? அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது?
சளி, இருமல்
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும்; சளி மற்றும் இருமல் பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும் சளி இருமல் வரும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
நுரையீரல் தொந்தரவுகள்
மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால், தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.
காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
கொசு
நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் கட்டாயம் இருக்கும். அதுவும் மழைக்காலத்தில், எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில், முக்கியமானது மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு.
‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம். இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி, உடலுக்குள் சென்று, சாதகமான காலம் வரும் வரை காத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் காய்ச்சல் வரும்.
மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான் இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும்.
‘ப்ளேவி வைரஸ்’ என்ற வைரஸ் காரணமாக ஏற்படும் நோய், ‘யெல்லோ ஃபீவர்’. இதுவும் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம்தான் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள்.
சிக்குன்குனியா காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.
மெட்ராஸ் ஐ
‘மெட்ராஸ் ஐ’ என அழைக்கப்படும் கண்நோய் மழை சீசனில் அதிகமாகப் பரவும். கண்ணுக்குள் இருக்கும் ‘கஞ்சக்டைவா’ எனும் பகுதியை அடினோ வைரஸ் தாக்குவதால் கண் சிவந்துவிடும். இதனால், சில நேரங்களில் கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கும். அடினோ வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும்.
வயிற்றுப்போக்கு
மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம்.
மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்...
மழைக்காலத்தில் முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டுமுறை வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அதிக சூடும் ஆபத்து.
நன்கு தேய்த்துக் குளிக்கும்போது, நம் உடல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.
சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவர் அறிவுரையின் பேரில் தாராளமாகத் தலைக்குக் குளிக்கலாம். தலைக்குக் குளித்ததும் உடனடியாக நன்றாகக் காயவைப்பது அவசியம்.
காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களைத் தவிர, அனைவரும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும்.
ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம்.
குறிப்பாக, உள்ளாடைகளை தினமும் மாற்ற வேண்டும். மழைக்காலத்தில் துணி துவைத்தால் காயாது என, சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. பகல் வேளையில் வெயிலில் துணிகளைத் துவைத்து உலர்த்தினால்தான் கிருமிகள் அழியும். உள்ளாடைகளைத் துவைக்காமல் அணியும்போது, தோல் நோய்கள் வரும்.
வருடத்துக்கு ஒருமுறை ‘இன்ஃப்ளூயன்சா’ (Influenza) தடுப்பூசி போட்டுக்கொள்வது, ஃப்ளூ காய்ச்சலில் இருந்து காப்பாற்றும். குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலைத் தடுப்பதற்கான நியூமோகோக்கல் தடுப்பூசி போட வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த முதியவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும். இதனால், காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். பழங்களை பகல் வேளையில் சாப்பிட வேண்டும்.
கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
சாலை ஓரங்களில் விற்கப்படும் ஃப்ரூட் சாலட், நறுக்கப்பட்ட பழங்கள் போன்றவற்றில் கிருமித்தொற்று இருக்கக்கூடும். எனவே அவற்றைச் சாப்பிடக் கூடாது.
காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் புதிதாகச் சமைத்து சாப்பிட வேண்டும். எல்லோராலும் மதியம் சுடச்சுட வீட்டு சாப்பாட்டைச் சாப்பிட முடியாது. ஆனால், காலையில் சமைத்த உணவை ஐந்தாறு மணி நேரங்களுக்கு உள்ளாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.
நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்பு, கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.
மழைக்காலத்தில் அதிகமாக காபி, டீ குடிக்கத் தோன்றும். ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்தக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கப் மட்டுமே காபி, டீ அருந்த வேண்டும்.
சூடாக சத்துமாவுக் கஞ்சியை வீட்டில் தயாரித்துச் சாப்பிடலாம்.
மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்காது. அதனால், தண்ணீர் அருந்தாமலேயே இருக்கக் கூடாது. சூப், ரசம், பால், டீ, காபி எனத் திரவ உணவுகள் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
சிறுநீரை அடக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் சிறுநீர் கழிப்பது அவசியம்.
பள்ளி செல்லும் மாணவர்கள் வீட்டில் கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரை எடுத்துச் சென்று குடிக்க வேண்டும்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்கவிடக் கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருக்கலாம்.
குப்பைகளை அவற்றுக்கு உரிய தொட்டிகளில் கொட்டவேண்டும். பிளாஸ்டிக் பைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றை வீட்டிலும் வீட்டுக்கு அருகிலும் இருந்து அகற்ற வேண்டும்.
வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது வாசலிலேயே கை, கால், முகம் போன்றவற்றை கழுவிவிட வேண்டும்.
செருப்பு, ஷூ போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டுக்குள் வந்ததும் முதலில் உடைகளை மாற்றுவது அவசியம்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், கைவைத்தியமோ, மருந்தகங்களில் மாத்திரை வாங்கி விழுங்கவோ கூடாது. உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன வகையான காய்ச்சல் என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்போதும் கையில் ஒரு கர்ச்சீப் வைத்திருப்பது அவசியம். தும்மல் வந்தாலோ, சளி வந்தாலோ கர்சீப் பயன்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் சளியை காறித் துப்பக் கூடாது. கர்ச்சீப்பை தினமும் நன்றாக வெந்நீரில் கழுவ வேண்டும்.
அடிக்கடி ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கல் உப்பு போட்டு, தொண்டையில் படுமாறு வாய்கொப்பளிப்பது தொண்டைப் புண்களை வராமல் தடுக்கும்.
மழைக்காலம் முழுவதும் ஒரே பெட்ஷீட், போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷீட் மற்றும் போர்வையைத் துவைத்து, உலர்த்திப் பயன்படுத்த வேண்டும்.
செயற்கை ரசாயனங்கள் கலந்த கொசுவத்தி, கொசுவத்தி திரவம் போன்றவற்றைத் தவிர்த்து, முடிந்தவரை மாலை நான்கு மணிக்கெல்லாம் ஜன்னல்களைப் பூட்டி, கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதே சிறந்த வழி.
நன்றி : விகடன்
No comments:
Post a Comment