உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [ F.A.O ] தெரிவித்துள்ளது.
திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.
வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.
ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !
பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.
உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.
---------------------------
நன்றி :M. நிஜாம்
No comments:
Post a Comment