Wednesday, June 19, 2013

DTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது?










இந்தியாவில் தொலைக்காட்சியின் 
தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் 
பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் 
இந்தியாவின் "கலாச்சாரக் காவலர்களும்" ஏன்...? ஒரு சில "அறிவு ஜீவிகளும்" கூட. அது 
ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் 
கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 
6,76,615 தான்.


ஆனால், இந்தியாவில் தொலைக்காட்சி முன்னிலை பெற்றது கடந்த 
பதினைந்து ஆண்டுகளாகத்தான்! இன்னும் சரியாகச் சொல்வதனால், கடந்த பத்து ஆண்டுகளில் 
கடும் பாய்ச்சலைக் காட்டியது இந்தியத் 
தொலைக்காட்சித்துறை.


இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் இத்திருப்பத்திற்குக் 
காரணமாக அமைந்தன.

1. 1982-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தூர்தர்ஷன் 
வண்ணத்தில் ஒளிபரப்பியது. இதற்கென நாடு முழுவதும் தரைத்தள நிலையங்கள் விரைவாக 
நிறுவப்பட்டன.

2. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சி.என்.என். ஸ்டார் டிவி 
போன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஜீ டி.வி, சன் டிவி முதலிய 
உள்நாட்டுத் தனியார் தொலைக்காட்சிகளும் இந்தியாவில் ஒளிபரப்பைத் 
துவங்கின.



இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியர்கள் இதுவரை பார்த்தறியாத 
பார்வை இன்பத்தைத் தொலைக்காட்சி எனும் காட்சி ஊடகத்தில் அளித்தன.

1991-ல் நடைபெற்ற வளைகுடா போரைக் காண இந்திய மேட்டுக்குடி 
மக்களின், மொட்டை மாடிகளில் டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்தன. ஆனால், இது மக்களிடம் 
பரவலாவதற்குத் தடைகள் இருந்தன.

அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியில் உருவாகும் எந்த ஒரு 
கண்டுபிடிப்பும் அல்லது தொழில் நுணுக்கமும் அதன் செயலாக்கம் என்பது அரசின் சட்ட 
திட்டத்தை ஒட்டி அமைவதுதான்.

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலும் இதுதான் நிகழ்ந்தது. 
1990களில் தொடங்கிய செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் சிறப்பாகச் செயல்படத் 
தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஏதுவாக இருந்தாலும் அரசின் கொள்கைகள் சில 
தடையாக இருந்தன. எப்படி?

செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவைத் 
தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டாலும் செயற்கைக் கோளிலிருந்து (Sattelite) நேரடியாக 
இணைப்புப் பெற்று (Up link) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி 
வழங்கப்படவில்லை.

இதனால் இவை தமது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து தாய்லாந்து, 
பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரைநிலையங்கள் மூலம் 
செயற்கைக்கோள் இணைப்புப் பெற்று இந்தியாவில் நிகழ்ச்சிகளை 
ஒளிபரப்பின.



இந்த வகையில் சன், ஏஷியா நெட், ஈநாடு, என்.இ.பி.சி. போன்ற 
தொலைக்காட்சிகள் இண்டல்சாட் எனும் செயற்கைக் கோளில் 13 டிரான்ஸ் பாண்டர்களை 
வாடகையாகப் பெற்றும் விஜய், ராஜ், ஸ்டார், ஜி, எம்., சோனி, டிஸ்கவரி 
தொலைக்காட்சிகள் தாய்காம், ஏஷியாநெட், ரிம்சாட், பிஏஎஸ் எனும் நான்கு 
செயற்கைக்கோள்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை ஒளிரப்பின.

இதனால் மிகுந்த அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை 
ஒளிபரப்புவதில் அதிகக் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. தனியார் தொலைக்காட்சிகள் 
ஏப்போதாவது சிறப்பு அனுமதி பெற்று வி.எஸ்.என்.எல் மூலம் முக்கியமான செய்தி 
அறிக்கைகளை அந்தந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பி, மீண்டும் அவை கேபிள் முகவர்களின் 
டிஷ் ஆன்டனாவில் பெற்ப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

ஆயினும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 
தூர்தர்ஷன் மட்டும் எந்தவிதச் சிக்கலும் இடையூறுமின்றி இத்துறையில் ஆதிக்கம் 
செலுத்தியது. கிரிக்கெட் மட்டும் தேர்தல்காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் 
செய்திகளை வி.எஸ்.என்.எல் மூலம் நேரஞ்சல் செய்வதற்கான ஏகபோக உரிமையை அது 
பெற்றிருந்தது.



இத்தகைய வசதியும் வாய்ப்பும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு 
வழங்கப்படாததால் வெளிநாடுகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதன்மூலம், 
அவற்றிற்க அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பெரும் 
காலதாமதமும் ஏற்பட்டன.



பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்திய 
அரசு தனது ஒளிபரப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க முன் வந்தது. இதன்படி, அக்டோபர் 
1998-ல் புதிய ஒளிபரப்புக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.

புதிய ஒளிபரப்புக் கொள்கையின் படி, இந்தியர்களின் பங்கு 80 
சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும். இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் 
இந்தியாவிலிருந்தே, செயற்கைக் கோளுடன் நேரடி இணைப்புச் செய்ய 
அனுமதிக்கப்பட்டது.

தொலைக்காசி வரலாற்றில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றத்தின் 
மையத்தளமாக சென்னைதான் விளங்கியது.




புதிய ஒளிபரப்புக்கொள்கை அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் 
உள்ள வி.எஸ்.என்.எல். நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றுடன், புதிதாக 40 அடி விட்டமுள்ள 
ஸ்டாண்ட்டர்டு "பி" ஆன்டெனாவை வெற்றிகரமாக சோதித்தது. அதிலிருந்து சென்னை, 
செயற்கைக் கோள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான இணைப்பு மையமாக மாறியது. 
இன்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 
செயலாற்றி வருகின்றன.

இந்திய அரசு நிறுவனமான வி.எஸ்.என்.எல். இன்டல்சாட் எனும் 
நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது. இந்த இன்டல் சாட் 150 நாடுகளுக்கு 
வீடியோ ஒளிபரப்பு மற்றும் தொலைபேசித் தொடர்புகளைத்தரும் 24 செயற்கைக்கோள்களைத் தனது 
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதில் ஐந்து செயற்கைக் கோள்கள் இந்தியப் 
பெருங்கடலுக்கு மேலிருந்து இயங்குகின்றன.

இன்று இந்தியாவிடம் தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி 
ஒளிபரப்பிற்கு உதவும் ஒன்பது செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் 
உள்ளன.



இன்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் தொலைக்காட்சிகளின் 
கண்காணிப்பில் இருக்கிறது. அவற்றுக்குத்தேவை ஒரு தொலைக்காட்சிக் கேமராவும் ஒரு 
சூட்கேஸ் உள்ளே வைத்து எடுத்துச்செல்லக்கூடிய வகையில் வந்துவிட்ட வி.எஸ்.ஏ.டி. 
(Very Small Aperture Trasmitters) என்ற கருவியுந்தான்.

எட்டுக்கோடி இந்திய இல்லங்களில் (80 மில்லியன்) 
தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. அதில் ஐந்துக் கோடியே 20 இலட்சம் 
தொலைக்காட்சிப் பெட்டிகள் (52 மில்லியன்) கேபிள் இணைப்புப் பெற்றவை. ஐரோப்பாவின் 
அனைத்து நாடுகளை விடவும் இது அதிகம்.

இந்தியாவில் இன்று 20,000 கேபிள் மையங்களிலிருந்து 40,000 
கேபிள் முகவர்கள் செயல்படுகின்றனர்.

மாநில மற்றும் சிறு வட்டார மொழிகள் உட்பட இந்தியாவில் 27 
மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிகழ்கின்றன. மேலும் 20 செயற்கைக்கோள்களில் 
உள்ள 200 டிரான்ஸ் பாண்டர்கள் மூலம் 300 மின்னணுத் தொலைக்காட்சி அலைவரிசைகளை இன்று 
இந்தியாவில் காண இயலும்.



இன்றைய தேதியில் இந்தியாவில் 150 நிறுவனங்களுக்கு 400 
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 180 
தொலைக்காட்சிகளின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் அனுமதிக்காக 
காத்திருக்கின்றன.

ஓராண்டில் இந்தியக் கேபிள் டிவி சந்தையில் புழங்கும் தொகை 
எவ்வளவு தெரியுமா? 9,000 கோடி ரூபாய்.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 60 இலட்சம் 
தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. தொலைக்காட்சிகளின் பெருக்கம் 
அதிகமான கடந்த 7 ஆண்டுகளில், மேலும் 60 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் 
தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். தற்போது தமிழக அரசு 80 இலட்சம் இலவச 
தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும் திட்டமொன்றை செயல்படுத்தி வருகிறது. ஆக 
தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மொத்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை 2 கோடி. 
ஒரு கேபிள் இணைப்பிற்கு ஒரு சந்தாதாரர் செலுத்தும் தொகை குறைந்த பட்சம் ரூ.100/- 
என்றால் 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகளுக்கு மாதாந்திரம் வசூலாகும் தொகை ரூ. 200/- 
கோடி. இதுவே ஆண்டொன்றிற்கு ரூ.2400/- கோடி. செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளை பெற்று 
விநியோகிக்கும் கேபிள் டிவி சந்தையில் மட்டும் தமிழகத்தில் ஓராண்டில் புழங்கும் 
தொகை ரூ. 2500/- கோடி என்றால் மலைப்பாய் இருக்கிறது அல்லவா... இந்த அமோக பண 
விளைச்சல் ஏற்படுத்தும் விளைவுகளைத்தான் அண்மைக்கால தமிழக அரசியலாய் நாம் 
பார்த்துவருகிறோம்.



சென்னையில் மட்டும் 12 இலட்சம் இணைப்புகள் இல்லங்களுக்குத் 
தரப்பட்டிருக்கின்றன. ஒரு இணைப்பிற்குச் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் 
என்றால் முகவர்கள் ஈட்டும் மொத்தத் தொகை 12 கோடி ரூபாய்.

கேபிள் டி.வி சந்தையில் புழங்கும் அபரிமிதமான பணப்பெருக்கமே 
இங்குப் பல்வேறு சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் காரணமாக 
இருக்கிறது.

அரசியல் செல்வாக்குப் பெற்றோரும் சட்டவிரோதக் கும்பல்களும் 
இத்தொழிலைத் தம் கைப்பிடிக்குள் கொண்டுவந்து விட்டனர். புதுதில்லியில் கேபிள் டி.வி 
முகவர் ஒருவர் 10 கோடிக்கும் மேல் வருமான வரி ஏய்ப்புச் செய்திருந்ததை வருமானவரிப் 
புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தன. தமிழகத்திலும் கேபிள் டி.வித் தொழிலில் 
ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாகத் தொடர்க் கொலைகள் நடந்தேறுகின்றன.



கேபிள் டி.வி முகவர்கள் ஓர் இணைப்புக்குக் குறைந்த பட்சம் 
ரூ.75/- முதல் அதிகபட்சமாக ரூ.300/- வரை மாதச் சந்தாவாக வசூலித்து 
வந்தனர்.

சிறு மற்றும் பெரு நகரங்களில் அதிகப்படியாகச் சந்தாத்தொகை 
செலுத்தும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கேபிள் தொழிலில் ஏற்பட்ட போட்டி 
காரணமாக ஒவ்வொரு முகவரும் அதிகப்படியான தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தரத் 
தலைப்பட்டனர். அவர்கள் வாங்கும் கருவிகள், உபகரணங்களுக்கான செலவுத் தொகை நுகர்வோர் 
தலைமீது விழுந்தது. மேலும், கேபிள் தொழிலில் செல்வாக்குப் பெற்றோர் தனி ஒருவராக 
ஆதிக்கம் செலுத்தி, வரைமுறை எதுவுமின்றி கட்டணம் வசூலித்து 
வந்தனர்.



மாதந்தோறும் தொடரும் இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் 
அதிருப்தியுறவே, மத்திய அரசு இதில் தலையிடும் கட்டாயம் ஏற்பட்டது.

கேபிள் டி.வி தொழிலை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் 
பொறுப்பை Telecom Regulatory Authority எனப்படும் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்திடம் 
விட்டது.

ஆயினும் ஒரு பொருளின் மீது அல்லது சேவையின் மீது 
பொதுமக்களின் நேரடி நுகர்வே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும் அத்தகைய 
தீர்வு எது?

காற்றில் உலாவரும் ஒலி அலைகளை உள்வாங்கிச் செயல்படும் 
வானொலி போன்றே, ஒலியோடு (Sound) ஒளியையும் (Vision) உள்வாங்கி வெளிப்படுத்தும் 
சாதனமே தொலைக்காட்சி.

துவக்கக்கால வானொலிப் பெட்டிகள், உயரமான இடங்களிலிருந்து 
ஏரியல் அல்லது ஆன்டெனா மூலமே ஒலி அலைகளை கம்பி மூலம் உள்வாங்கி வெளிப்படுத்தின. 
பிறகு வானொலித் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு, அக்கருவி நவீனப்படுத்தப்பட்டது. 
இன்றைக்கும் இந்திய நகரங்களில் இருபத்தைந்தே ரூபாய்க்கு விற்கும் சிறிய வானொலிப் 
பெட்டிகள், சிற்றலை பண்பலை எதுவானாலும் ஏரியலோ ஆண்டெனாவோ எதுவுமின்றி சிறப்பாகவே 
செயல்படுவதை வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும்.

1990-ஆம் ஆண்டுக்கு முன் நமது தொலைக்காட்சிப் பெட்டியின் 
ஆன்டெனா, தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்புக் கோபுரத்திலிருந்து ஒலி-ஒளி அலைகளைப் 
பெற்று நமது வீடுகளில் ஒளிபரப்பியது.



இதுவே, ஒளிபரப்புக் கோபுரங்களிலிருந்து மட்டுமல்லாமல், 
செயற்கைக்கோள் வழியே பெறப்படும் ஒலி-ஒளி அலைகளைப் பெற்றுத்தரச் சற்று சக்திமிக்க 
நவீனமான ஆன்டெனாக்கள் தேவை. முன்பு நீளவாக்கில் இருந்த ஆன்டெனாக்கள் இப்போது சிறு 
குடை வடிவில் (Dish Antena) அவ்வளவு தான் வித்தியாசம்.

இதன் பயன்பாட்டைப் பரவலாக்கும் நோக்கோடு இந்திய அரசு கடந்த 
2004-ஆம் ஆண்டு இறுதியில் தனது ஒளிபரப்புக் கொள்கையில் இன்னொரு மாற்றத்தை 
அறிவித்தது.

அது விண்ணிலிருந்து வீட்டிற்கு (Diret to Home) திட்டம் 
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாலுணர்வைக் தூண்டும் தொலைக்காட்சி தவிர, மற்ற 
தொலைக்காட்சிகளை, யாருடைய குறிக்கீடும் இன்றி நீங்களே உங்கள் இல்லத்தில் கண்டு 
களிக்கமுடியும்.

DTH எனப்படும் விண்ணிலிருந்து வீட்டிற்கு எனும் தொழில் 
நுட்பம் எவ்விதம் செயல்படுகின்றது?

தரை நிலையங்களிலிந்து அனுப்பப்படும் தொலைக்காட்சி 
நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள்களைச் சென்றடைந்துப் பின் நமது வீட்டு டிஷ் ஆன்டெனாக்கள் 
அவற்றை உள்வாங்கி, நமது வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் 
தருகிறது.

இதற்குத் தேவைப்படுவதெல்லாம் சிறிய வடிவிலான டிஷ் 
ஆன்டெனாவும், ஒரே கற்றையாக வரும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் 
தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்க டிஜிட்டல் டிகோடர் எனப்படும் செட்டாப் பாக்ஸீம் 
தான்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் இறங்கித் தொலைக்காட்சி 
நிகழ்ச்சிகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டது போலவே, டி.டி.எச்., தொழில் 
நுட்பத்திலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறது.

இந்த வகையில், இந்தியாவில் இத்துறையில் முதலாவதாக நுழைந்த 
நிறுவனம் ஜி தொலைக்காட்சிக்குழுமம் இதற்கென டிஷ் டிவி (Dish TV) என்ற நிறுவனத்தை 
அது துவக்கியுள்ளது. இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப, 
அந்தந்த நுகர்வோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் திட்டம் ஒன்றை தயாரிக்கிறது. 
எப்படி? த்மிழ்நாடு என்றால் தமிழ்த் தொலைக்காட்சிகளோடு என்.டி.டி.வி, சி.என்.என். 
பிபிசி, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க், பேஷன் டிவி முதலான 
80 தொலைக்காட்சிகளைத் தருகிறது. இதற்கென ஆன்டெனா மற்றும் டிகோடர், பார்வையாளர் 
தெரிவைப் பதிவு செய்துச் செயல்படுத்தும் வி.சி.கார்டு (Viewing Card) போன்ற 
உபகரணங்களை நிறுவி, அதன் செலவுத் தொகையை, மாதக் கட்டணமாக வசூலித்துக் கொள்கிறது. 
ஜி.டி.வி இவ்விதம் அது நிர்ணயித்துள்ள மாதக்கட்டணம் ரூ. 120/- 
ஆகும்.



Tata Sky நிறுவனமும் டி.டி.எச். சேவையில் நுழைந்துள்ளது. 
மாணவர்கள், இளைஞர்களுக்கெனத் தனித் தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சிச் 
சேவைகளையும் மாதாந்திர கட்டணத்திற்கு வழங்கி வருகிறது.

தனியாருக்கான நுகர்வுச் சேவையில், அரசு நிறுவனமான 
தூர்தர்ஷன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ரூபாய் 160 கோடி முதலீட்டில் நாட்டின் 
சில பகுதிகளில் இத்திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறது தூர்தர்ஷன்.



தூர்தர்ஷன் டைரக்ட் பிளஸ் என்ற அதன் திட்டத்தில் 
தூர்தர்ஷனின் 17 அலைவரிசைகளும் 13 தனியார் தொலைக்காட்சிகளும் அடங்கியுள்ளன. 
தூர்தர்ஷன் இந்த D.T.H. திட்டத்தில் அனைத்து உபகரணங்களையும் மொத்தமாகப் பெற 
ரூ.2500- 3000 வரையே ஆகும்.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி சந்தை 
இரண்டிலும் ஏகபோக உரிமை பெற்றிருந்த சன் குழுமம், சமீபத்தில் அரசியல் மாற்றங்களைத் 
தொடர்ந்து DTH- தொழிலில் இறங்கப் தள்ளப்பட்டது. SUN DIRECT DTH என்ற அதன் 
திட்டத்தில் பொழுதுபோக்கு-திரைப்படம் விளையாட்டு இசை-அறிவியல் கல்வி என பல 
தொலைக்காட்சி தொகுப்புகள் தரப்பட்டு அதற்கேற்ப மாதாந்திர கட்டணம் 
வசூலிக்கப்பட்டது.

இனி, காடு-மலை-கடல் என எங்கும் ஒரு நேயர் நேரடியாகத் 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும்.

நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் உங்கள் கை வசமுள்ள 
உபகரணங்களே போதும்.

அனலாக் முறையில் செயல்படும் கேபிள் டி.வி போல் அல்லாமல், 
ஒலியும்-ஒளியும் எந்த விரயமும் இன்றி மிகத் துல்லியமாக டிஜிட்டல் வடிவத்திலேயே 
உங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் கிடைக்கும்.

விண்ணிலிருந்து வீட்டுக்கு எனும் டி.டி.எச். 
ஒளிபரப்பிற்காகவே தனிச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தியா ரூபாய் 
210 கோடி ரூபாய்ச் செலவில், 3025 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 
12 ஆண்டுகள்.

தொலைக்காட்சித் துறையில் ஆர்வம் உள்ளோர், அதன் தொழிலில் 
உள்ள முன்னேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களும், அவசியம் காணவேண்டியது, ஸ்கேட் 
இண்டியா (SCAT INDIA) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் மும்பையில் நடத்துகிற 
கண்காட்சியாகும்.

இந்திய அரசின் வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (Indian Trade 
Promotion Organisation) இந்தக் கண்காட்சியில், 15-க்கும் மேற்பட்ட நாடுகள்
பங்கெடுக்கின்றன. உலகெங்கிலுமிருந்த 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் 
தயாரிப்புகளை முன் வைக்கின்றன.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தின் 
விளைச்சலை நீங்கள் அங்கு காண முடியும்.

************************************
நன்றி :http://tamilvaasi.blogspot.com/2011/06/dth.html

No comments:

Post a Comment