Friday, June 14, 2013

அத்தனையும் என் ஞாபகத்தில்



பட்டாம் பூச்சிகள் நிறைந்த
உனது பட்டுப்பாவாடை 
குட்டைச் சட்டை

உன் கழுத்தோடு 
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை

உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை

அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள்

மழை ஓய்ந்த பொழுதும்
உன் விரல்கள் தீண்டி
என் மீது பொழியும்
நொடிப்பொழுது
செடி மழை

உன் உருவத்தைப்
பிரதி எடுத்து திரையிட்ட
செம்மண் நீர் சாலை

கையில் காலணியோடு
நடந்த
ஊற்றுநீர் கசியும்
அந்த ஒற்றையடிப்பாதை

உச்சியில் ஓட்டை
விழுந்த கறுப்புக்குடை

குடைக் கம்பியில் வடியும்
ஒருதுளி நீர்பட்டு
சிலிர்க்கும் உனது ஸ்பரிசம்

அந்த ஓட்டைக்
குடைக்கடியே நாம்

அத்தனையும்
என் ஞாபகத்தில்
ஒவ்வொரு மழைநாளிலும் !

--------------------
--------------------
நன்றி :காக்கை சிறகினிலே

அன்புடன்,
அகல்

No comments:

Post a Comment