மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.
தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.
இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளை போட்டது.
இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள், தெரு நாய்க்குட்டிகள் என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாக காணப்பட்டன, அந்த குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து, மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ் மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை கொடுத்துவிட்டார்.
தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும், சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது வீட்டில் இருந்த குடையை கொண்டுவந்து நாய்குட்டிகள் மீது வெயில் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த சாக்குகளை கொண்டு போய் விரிப்பாகவும் விரித்துவைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.
அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை,
ஒரு நாள் காலை தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை.
கொண்டுவந்த சாப்பாடை கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளை கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத் தோண்டி, தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு இடுக்குவிடாமல் குட்டிகளை தேடி, தேடி ஒடியது, ண்ணீர்விட்டு அழுதது.
இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார், கொஞ்ச நேரத்தில் நாய் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய் நாய் இல்லாத சமயமாக பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.
சுரேஷ்க்கு இரண்டு நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துகிடந்தன, ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.
சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா, என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு "சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது, ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது, எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.
என்ன ஒரு ஆச்சர்யம்
இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர் வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டு போய்விட்டார், தாயை பார்த்து சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம், தங்களது சந்தோஷத்தை சத்தமாக குரைத்து பகிர்ந்து கொள்ள, மீண்டும் இந்த சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி வந்த சுரேஷ்க்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம்.
இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற சந்தோஷம் தாய் நாயின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது, நீண்ட நாள் பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும் வெளிப்படுத்தியது.
பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.
--------------------------------------------------
தினமலர்
No comments:
Post a Comment