Friday, February 22, 2013

பேஸ்புக்கை' விட 'கிளாஸ்புக்கே' மேல்..!. முகநூலில் மூழ்கினால் முன்னேரமுடியாது.!!.

அண்மையில் என் முகநூல் பக்கத்தில் நண்பர் கோரிக்கை ஒன்று வந்தது. எங்கோ கேள்வி பட்ட பெயர் போல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள என் சித்தி பையனின் முகநூல் பக்கம் அது. சிறிய வயதிலேயே கணினி பயன்பாட்டை தெரிந்து வைத்துள்ளான் என்ற சந்தோஷம் ஆயினும், அவன் தேர்வு செய்துள்ள முகநூலில் உள்ள தீமைகளை நினைத்து வருத்தமும் கூட. 
 
பதினாறே வயதான அந்த சின்னப் பையனின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான நண்பர்கள். அதில் பலர் பெண்களே!. நாங்கள் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுது ஆண் நபர்களே அதிகம் (இன்று வரையிலும் நமக்கு அப்படித்தான் ). இந்த சின்ன வயதில் இத்தகைய என்னத்தை அவன் மனதில் விதைத்ததற்கு இன்றைய கால அநாகரீக ஆபாச ஊடகங்களுக்கும் சினிமாக்களுக்கும் முக்கியப் பங்குண்டு. பெற்றோர்கள் இந்த விசயத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். 

இவன் பரவாயில்லை ஆண்பிள்ளை. ஆனால் டிவியும் சீரியலுமாக இருந்த இளம் பெண்கள் இன்று மொபைல் கையுடனும் கணினி மடியுடனும் இருப்பது கூடுதல் கவலை. இணையதளத்தின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஏராளம் இருப்பின், இதுபோன்ற சமூக இணைப்பு சேவைத் (SNS- Social Networking Service) தளங்களால் மாணவர்களும் இளம் வயது பெண்களும் வழிகெட்டு சீரழிவது சுலபமே. இவர்களின் எதிர்காலக் கனவுகள் இந்த கணினியின் கதிர்வீச்சில் அழிந்து போக அதிக வாய்ப்பும் உண்டு. 

இது போன்ற சமூக இணைப்பு சேவை அளிக்கும் ஊடகங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த ஒன்றாக இருந்தாலும், அதன் நன்மையையும் தீமையையும் எடை போட்டால் தீமையின் பக்க தராசு தான் சற்று தரை தட்டுகின்றது . கல்வி கற்கும் இளைஞர்கள் அவர்களது 'கிளாஸ்புக்கில்' நேரத்தை செலவிடுவதை விட 'பேஸ்புக்கில்' தான் அதிகம் கழிக்கின்றனர். இவை எதிர்கால கிளைகளின் இலைகளை கருக வைக்கும் அதே சமயம் நூற்றுக்கணக்கான அசிங்கங்களும் ஆபாசங்களும் இவற்றில் அரங்கேறுவது வாடிக்கை ஆகிவிட்டது. 



 

சமீபத்தில் படித்த செய்தி “பேஸ்புக்கில் காதல் வயப்பட்டு கர்ப்பை பறிகொடுத்த இரண்டு பெண்கள்” பற்றியது. இது இவர்களுக்குத் தேவையா? பக்கத்து வீட்டுக்காரனையே நம்ப முடியாத இக்காலத்தில் இது போன்ற இணையவழி காதலை நினைத்து பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கின்றது. “முகநூல் நட்பது நட்பன்று – கொஞ்சம் அகநூல் கற்பதும் நன்று” என்று சொல்லும் அளவுக்கு இந்த ‘முகநூல்’ இளைஞர்களிடையே மிகவும் வேரூன்றி விட்டது. தான் நேரில் பார்க்க சுமாராக இருந்தால், அவர்களின் முகநூல் புகைப்படமோ சினிமாக்காரர்களின் அல்லது விளம்பர மாடல்களின் படங்களைக் கொண்டதாக மாறிவிடும். இப்பொழுது முகநூல் யாருடைய முகத்தை காட்டுகிறது என்பதே தெரியவில்லை.

இது ஒருவரை பற்றிய மாயையை ஏற்படுத்துமே தவிர உண்மையான முகத்தை (குணத்தை ) காட்டாது. சிலர் இதில் விதிவிலக்கு. கடந்த காலத்தில் நட்பை வளர்த்தது போல் இன்றைய கால நட்பு இல்லை. குட்டிச்சுவர் ஏறி உட்கார்ந்து, பேசி, கிண்டலடித்து, சண்டை இழுத்து பின்பு சமாதானம் ஆகும் சுகம் இந்த முகநூலில் உண்டோ?. 

சுகமான தென்றல் காற்று, மரத்தடி ஊஞ்சல், சீட்டுக்கட்டு, கில்லி, பம்பரம், கோலிக்குண்டு, கண்ணாமூச்சி இவற்றை நழுவவிட்டு கணினியின் மடியில் கற்பனை சருகுகள் ஆகிவிட்டனர். பாவம் இந்த காலத்து இளஞர்கள் கண்ணியும் கணினியுமாக காலத்தை கழிக்க கடைசியில் மிஞ்சுவது கற்பனையின் சாம்பல் மட்டும் தான். இவ்வாறு ஒரு புறம் இருக்க செல்போன்களில் தவழும் முகநூல் மென்பொருள் வசதி, இப்பொழுது தனது சேவையை படுக்கை முதல் பாத்ரூம் வரை நீளச் செய்துள்ளது. வாழ்த்துக்கள்!. 


 

முகநூலில் ஒரு நல்ல கருத்தை பதிவு செய்தால் அதை ‘லைக்” செய்ய ஒருவரும் இல்லை. அதே நேரம் ஒரு பெண் “நான் தூங்கப் போறேன்” என்று பதிவு செய்த பத்து நிமிடத்தில் 63 பதில்கள் மற்றும் எண்ணற்ற “லைக்குகள்”. அதில் 98% ஆண்களே. இவள் தூங்க இத்தனை அக்கப்போர்களா?. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை “செல்போன்களும் மாணவர்களும்” என்ற தலைப்பில் ஏராளமான விமர்சனங்கள். அதில் கூட ஒரு பெண் ஒரு ஆண் என்ற அளவுகோல் இருந்தது. இன்று இந்த முகநூலில், அறிவை கழற்றி வைத்து விட்டு நாகரீகம், பண்பாடு, கலாசாரம் மறந்து, ஆட்டு மந்தையாக மாறிவிட்டனர். 

ஒரு பெண்ணின் முகநூல் பக்கத்தில் எண்ணற்ற ஆண்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களின் மதிநுட்ப வளர்ச்சிக்கு பங்கம் விளைவித்து விட்டதோ?. என்னுடன் படித்த நண்பர்கள் பலரின் இன்றைய முகவரியை முகநூல் காட்டியது. ஆனால், அவர்களிடம் அன்று இருந்த நட்பையும் அன்பையும் இன்று அதே தரத்துடன் காட்டத் தவறிவிட்டது. எனது பிறந்த நாள் என்று என் முகநூல் காட்ட, வந்து குவிந்தது பல நூறு வாழ்த்துக்கள். ஆயிரம் பேர் சொல்லும் அந்த வாழ்த்துக்களில் ஏனோ எனக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம், முகநூல் நண்பர்களின் பட்டியலில் இருக்கும் பலர் எனக்கு முகம் தெரியா நண்பர்கள் தாம். அவர்களை நேரில் பார்த்தால் கூட எனக்கு அடையாளம் தெரியாது!. இது போன்ற அதிருப்திகள் பல உண்டு முகநூலில். ஆயினும் என் உண்மையான நட்புகள் இந்த முகநூலையும் கடந்து வந்து வாழ்த்து சொல்லும் என்பது உறுதி!. ஜாதி மத பேதமில்லாமல் நட்பையும் கற்பையும் கடைவிரிக்கும் பெருமை முகநூலூக்கே உரியது. 

முகநூல் ஆற்றும் இந்த சீரிய சமூகப் பணிகளுக்கெல்லாம் நம் நேரமும், கனவுகளும், பொருளாதாரமும் உரமாக அதன் விளைச்சலோ சமூக சீரழிவையும் ஒழுக்கக்கேட்டையும் தவிர வேறென்ன? முகநூலில் நட்பையும் காதலையும் வளர்ப்பது முடி இல்லா தலைக்கு சீப்பு போடுவதை போலத் தான் என்பதை இந்த சமூகம் என்று உணருமோ?. காலம் பதில் சொல்லும் முன் விழித்துக்கொள்ளுங்கள். 

உங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள். அறிந்தே அவர்களை வழிகேட்டில் விட்டு விடாதீர்கள். அவர்களின் சீர்கேட்டிற்கு நீங்களும் காரணம் ஆகிவிடாதீர்கள். தகுந்த முன் எச்சரிக்கைகளுடனும், நேரக் கட்டுப்பாட்டுடனும் முகநூலை பயன்படுத்துவது சிறந்தது. அறியாமையில் நம் முகத்தை முகநூலில் புதைத்தால் மக்கப்போவது நம் வாழ்க்கை தான் என்பதை நினைவில் கொள்வோம். 

-----------------------------------------------------------
ராஸிக் http://www.inneram.com/                                                                                                                                                                  Posted by அதிரை முஜீப்
http://www.adiraimujeeb.blogspot.com/2012/06/blog-post.ஹ்த்ம்ல்

மனதில் சுமக்கும் கனங்கள்




ஒரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்?” என்று கேட்டார்.

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ”ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....”

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?”

“ஆமாம்” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

”ஒன்றும் ஆகாது” மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

”இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

“கை வலிக்கும்” என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

”தாங்க முடியாத வலி ஏற்படும்”, “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”, “ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்”
என்று பதில்கள் வந்தன.

”அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?”

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்”

”இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்”

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்”

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ”ஐயோ இதுவுமா” என்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!


------------------------------------------------
நன்றி - என்.கணேசன் 

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....





ஒரு தந்தையும் மகளும் ... 35 வயதுக்கும் குறைவான அப்பாவும் 5 வயதுக்கு குறைவான மகளும் .. அப்பாவின் கையைப் பிடித்தே…. உலகே தனதான சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள்... அவளின் முகத்தில் பூக்களை விட அழகான மலர்ச்சி.... ஏதோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ...




ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச்சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..

அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை..கன்னத்தை என இழுக்கவும்..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்..

ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும்..முத்தமிட்டும் ..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும்..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து..கணவனிடம் பரிணமித்து..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள்..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதிலும்.

பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதலிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
----------------------------------------------------
# பெண்ணெனும் தேவதை #
-ரிலாக்ஸ் ப்ளீஸ்

Thursday, February 21, 2013

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்!




கணவன் மனைவி ஆகிய‌ இருவரிடமும் சரியான புரிதலும், மனப் பக்குவமும்இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய கால த்தில் திருமணம் செய்து கொள்பவர் கள், திருமணத்தை ஒரு விளையாட் டாகவே நினைப்பதால்தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின் றனர். இந் த உலகில் இருக்கும் உறவு முறைக ளிலேயே கணவன்- மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது.
-
இத்தகைய உறவை வாழ்நாள் முழுவ தும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண் மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அட ங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இரு ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை பட்டியலிட் டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரி ந்து கொள்ளுங்கள்…
-
*கணவன்-மனைவி இருவருக்குள்சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர் ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்தபிரச்சனையே இருவ ருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற் படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவ ரும் பொறுமையாக பேச வேண்டும். இந் நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண் டி வரும்.
-
*சந்தோஷமான வாழ்க்கை அமை ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளை யும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண் டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.
-
* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அத னை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோ ஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்க லாம்.
‘தவறுசெய்வதால்தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்க மாட்டார்கள். மேலும்தவறு செய் தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும்அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார் க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.


 
-
*நடைமுறை மற்றும் பழக்க வழக்கங்க ளை சூழ் நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அதை விட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும்இடையில் எந்த நேரமும் சண்டைவந்து கொண்டே இருக்கும். ஆக வே ஒரு சில மாற்ற ங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.
-
* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவு ம் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லா விட்டால், அது இறுதியில் நம்பிக்கையின் மையை ஏற்படுத்திவிடும். பின் எந்நேரமும் சண்டை வருவதோடு,இறுதியில் விவா கரத்து வரை சென்று விடும். எனவே எதுவா னாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனைபேசி இருவ ரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள் வதன் மூலம், பிரித லை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமத மாகி விட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு.
-
இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல் பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோ ஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.

----------------------------------------
விதை2விருட்சம்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16
வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய 
ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது 
என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.




இந்த
வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் 
பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். 
ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… 
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் 
மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் 
கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட 
நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத 
கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 
ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். 
நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் 
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து 
மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி 
நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து
விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது
ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை 
ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… 
வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை 
காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை 
எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி 
அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில்
காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் 
பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற 
எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது 
காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில்
வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள்
இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் 
மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார 
பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில்
நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய 
ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை 
பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை 
அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது 
இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் 
விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 
10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள்
பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி 
செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் 
செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை 
பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் 
காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க 
வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். 
தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு 
முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் 
என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த 
பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை 
ஏற்படுத்தும்…

இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்.

---------------------------------
http://www.eegarai.net/t96244-topic

Wednesday, February 20, 2013

சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்!



பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவற்றுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நாம் பாடுவதை போலவே பறவை களும் பாடுபடுகிறது. குஞ்சுகளைப் பறி கொடுப்பது முதல் வேட்டையாட்களிடம் சிக்கி கைகால்களையும் உயிரையும் கூட இழக்கிற வாய்ப்புகள் உண்டு.

ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?

இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.

தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.

"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.

ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.

"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.

ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
---------------------------------------------------------------
சிறுவர் மலர்

Tuesday, February 19, 2013

ஒரு நா(தா)யின் கண்ணீர்...




மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.


தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.
இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளை போட்டது.
இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள், தெரு நாய்க்குட்டிகள் என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாக காணப்பட்டன, அந்த குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து, மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ் மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை கொடுத்துவிட்டார்.


தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும், சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது வீட்டில் இருந்த குடையை கொண்டுவந்து நாய்குட்டிகள் மீது வெயில் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த சாக்குகளை கொண்டு போய் விரிப்பாகவும் விரித்துவைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.


அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை,
ஒரு நாள் காலை தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை.
கொண்டுவந்த சாப்பாடை கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளை கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத் தோண்டி, தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு இடுக்குவிடாமல் குட்டிகளை தேடி, தேடி ஒடியது, ண்ணீர்விட்டு அழுதது.
இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார், கொஞ்ச நேரத்தில் நாய் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய் நாய் இல்லாத சமயமாக பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.
சுரேஷ்க்கு இரண்டு நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துகிடந்தன, ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது.


சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா, என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு "சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார்.
தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது, ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது, எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.


என்ன ஒரு ஆச்சர்யம்
இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர் வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டு போய்விட்டார், தாயை பார்த்து சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம், தங்களது சந்தோஷத்தை சத்தமாக குரைத்து பகிர்ந்து கொள்ள, மீண்டும் இந்த சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி வந்த சுரேஷ்க்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம்.


இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற சந்தோஷம் தாய் நாயின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது, நீண்ட நாள் பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும் வெளிப்படுத்தியது.
பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.

--------------------------------------------------
தினமலர் 

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...{10 இருந்து 60 வரை ஒரு காதல் (கண்ணீர்) ஓவியம்}


10 இருந்து 60 வரை ஒரு காதல் (கண்ணீர்) ஓவியம்.




10 வயதில் :

நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :

நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :

பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :

நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :

அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :

நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :

சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :

தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை...!
----------------------------------------------
நன்றி: தமிழ் கருத்துக்களம்