டுரோஜான் சண்டை மற்றும் டுரோஜான் குதிரை
பல நூறு வருடங்களுக்கு முன்னர் கிரேக்க மன்னன் மெனிலஸின் அழகிய மனைவியான ஹெலனை டிராய் நாட்டு இளவரசனான பாரிஸ் தன் நாட்டிற்கு கடத்திச் சென்று விட்டான். டிராய் சென்ற பாரிஸ், ஹெலனை அங்கு திருமணம் செய்து கொண்டான். இது கி.மு. 1200 ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது.
ஹெலனை மீட்பதற்காக கிரேக்க நாடு டிராய் நாட்டின் மீது போர் தொடுத்தது. கிரேக்க நாட்டவர் போர் தொடுக்க பல கப்பல்களில் வந்தார்கள். இவ்வாறு வந்தவர்கள் டிராய் நாட்டை பத்து ஆண்டுகள் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனால் டிராய் நாட்டினுள் நுழைய முடியவில்லை. ஏனெனில் டிராய் நகரைச் சுற்றி மிக உயரமான மற்றும் வலுவான மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த மதில் சுவரின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் ஒரு எதிரி கூட உள்ளே நுழைய முடியவில்லை. மதில் சுவரை உடைக்க கிரேக்கர்கள் பலமுறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
கடைசியாக வேறு வழியில்லாமல் கிரேக்கர்களின் சிறந்த போர்த் தலைவனான ஒடிசஸ் திட்டப்படி கிரேக்கர்கள் பிரம்மாண்டமான மரக் குதிரை ஒன்றைச் செய்தார்கள். அதற்கு மேடை மற்றும் சக்கரங்களும் செய்து பொருத்தினார்கள். ஒடிசஸ் உள்ளிட்ட சிறந்த போர்வீரர்கள் அந்த மரக்குதிரையின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரகசிய அறையில் ஒளிந்து கொண்டார்கள். அந்த மரக்குதிரையை இரவின் இருளில் மதில் சுவர் ஓரமாக கொண்டு போய் நிறுத்தினார்கள்.
மறுநாள் விடிந்ததும் மதில் சுவரின் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்த டிராய் நாட்டு வீரர்கள், மரக்குதிரையை ஏதோ கிரேக்க கடவுள் என்று எண்ணினார்கள். அதன் அழகிலும், பிரம்மாண்டத்திலும் மயங்கியவர்கள் அதனை டிராய் நகரித்தினுள் இழுத்துச் சென்றார்கள். மரக்குதிரையைப் பிடித்ததை ஒரு மிகப் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டாடினார்கள். பின்னர் கொண்டாடிய களைப்பிலும் மது உண்ட சோர்விலும் படுத்து உறங்கினார்கள்.
பின்னிரவு நேரத்தில் டிராய் நாட்டு வீரர்கள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருக்கும் போது, மரக் குதிரையின் வயிற்றில் இருந்த கிரேக்க வீரர்கள் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியே வந்தார்கள். மதில் சுவரின் கதவுகளைத் திறந்து கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைய வழி ஏற்படுத்தினார்கள். பின்வாங்கிச் செல்வது போல் போக்குக் காட்டிச் சென்றிருந்த கிரேக்க கப்பல்கள் மீண்டும் திரும்பி வந்தன. அதிலிருந்து ஆயிரக்கணக்கான கிரேக்க வீரர்கள் நகரத்தினுள் நுழைந்தார்கள். அவர்கள் டிராய் நாட்டு வீரர்களான டிராஜன்களையும் அவர்தம் குடும்பப் பெண்டிரையும், குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். வீடுகளைக் கொளுத்தினார்கள், நகர் முழுவதையும் கொள்ளையடித்தார்கள். டிராஜன்கள் முழுமையாக தூக்கத்திலிருந்து விழிக்கும் முன்பே அந்த மாபெரும் நகர் சிதலமடைந்திருந்தது. அவர்கள் நடந்ததை உணரும் முன்பே டிராய் நகரம் கிரேக்கர்களின் கையில் விழுந்திருந்தது.
போரில் வென்றதும் தன் துரோக மனைவியைக் கொல்ல உறுதி பூண்டிருந்த மெனிலஸ், அவளைக் கண்டதும், அவள் அழகிலும், மயக்கும் தன்மையிலும் மயங்கி அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டான்.
டுரோஜான்களை வெல்வதற்காக உருவாக்கப்பட்ட குதிரை என்பதால் அது டுரோஜான் குதிரை என்றழைக்கப்பட்டது. அப்போது முதல் இலக்கிய ரீதியாக டுரோஜான் குதிரை (Trojan Horse) என்பது எதிரி நாட்டுப் படையை ஊடுருவி ரகசியமாக அழிப்பவரைக் குறிக்கிறது. கணினி உலகிலோ அது வைரஸுக்கு வைக்கப்பட்டுள்ள பெயராகும். வரலாற்று கால குதிரையைப் போலவே, அனுமதியில்லாமல் அடுத்தவரின் கணினிக்குள் ஊடுருவி, அங்கு உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்கும் வைரஸ்களை இப்பெயர் கொண்டு அழைப்பதில் தவறில்லை தானே!
http://en.wikipedia.org/wiki/Trojan_War
http://www.agalvilakku.com
No comments:
Post a Comment