Thursday, December 20, 2012

செல்ல தேவதையே, கண்ணுறங்கு...! தாத்தாவோ அல்லது பாட்டியோ கதை சொல்லி அதை நாம் கேட்டு வளர்ந்த நாளெல்லாம் இன்று வெறும் கனவாகிப் போய் விட்டது.

                           

''... அந்த ராஜா வேட்டைக்குப் போனாரா, கூடவே அவரோட மந்திரிகளும் வந்தாங்களா... அப்பப் பார்த்து சிங்கம் திடீர்னு குறுக்கே வந்ததாம்...'' இப்படி நம்முடைய தாத்தாவோ அல்லது பாட்டியோ கதை சொல்லி அதை நாம் கேட்டு வளர்ந்த நாளெல்லாம் இன்று வெறும் கனவாகிப் போய் விட்டது. இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் தூக்கத்தின்போது கதை கேட்காமலேயே தூங்கிப் போகின்றனராம். 

அது ஒரு கனாக் காலம். அந்தக் காலம் மீண்டும் நிச்சயம் வர முடியாது. முன்பெல்லாம் குழந்தைகளைத் தூங்க வைக்க பாட்டுப் பாடியும், கதை சொல்லியும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் சிரத்தை எடுத்து தூங்க வைப்பார்கள்.



கண்மணிகளை படுக்க வைத்து, அவர்களுக்கு அருகே படுத்துக் கொண்டு நிலாக் கதையோ அல்லது தேவதைக் கதையோ அல்லது பட்டாம்பூச்சிக் கதையோ இல்லை ராஜா கதையோ சொல்லி தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார்கள். அது ஒரு கலை. வெறுமனே எதையாவது சொல்வது கதையாகி விட முடியாது. கதையை ரசிக்கும்படியும், தூக்கம் வருவதற்கேற்ற வகையில் மென்மையாகவும் சொல்வது எல்லோருக்கும் கை கூடாது. 


                                                    

காதுகளில் சின்னதாக தாலாட்டுப் பாடுவதைக் கூட இன்று பல பேர் மறந்து போய் விட்டனர்.

செல்ல மயிலே ஆராரோ 
சின்னக் குயிலே ஆராரோ
கண்ணுறங்கு கண்ணே ஆராரோ 
நீயும் உறங்கு ஆராரோ



 என்று சொல்லி ஒவ்வொரு விஷயமாக தாலாட்டுப் பாட்டில் போட்டு மென்மையாக தட்டிக் கொடுத்து, காதோரம் கிசிகிசுப்பாக பாடும்போது எந்தக் குழந்தையும் கண்ணயர்ந்து நிம்மதியாகத் தூங்கிப் போகும். 
                              
                                          

ஆனால் இப்படிப் பாட்டுப் பாடி, கதை சொல்லித் தூங்க வைப்போது இப்போது அருகி வருகிறதாம். இதற்குப் பதிலாக டிவி பார்ப்பதிலும், சிடியைப் போட்டுப் பாட்டுக் கேட்பதிலும், கம்ப்யூட்டர் கேம்ஸில் மூழ்கிப் போவதுமாக குழந்தைகளின் வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டதாம்.

மேலும் இன்றைய வீடுகளில் தாத்தா, பாட்டிகளைக் காண்பதும் பெரும் அரிதாகி விட்டது. அப்படியே தாத்தா, பாட்டிகள் இருந்தாலும் அவர்களிடம் இன்றைய பெற்றோர்கள் அண்ட விடுவதே இல்லை. பாட்டி கிட்ட போகாத, பழங்கதை சொல்லி போரடிப்பார் என்று சொல்லியே பலர் பிள்ளைகளை வளர்க்கின்றனராம். இப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு அந்த கதை கேட்கும் அருமையான தருணம் பறி போய் விடுகிறதாம்.

பாட்டி மடியில் படுத்தபடி, அவரது செல்லக் கை நம்மைத் தட்டிக் கொடுக்க, இன்னொரு கை, தலையை கோதிக் கொடுக்க அவர் வாயிலிருந்து உதிரும் கதைகளையும், தாலாட்டுப் பாடல்களையும் கேட்டு நாம் தூங்கிய காலம்.. இன்று நம் குழந்தைகளுக்கு கடந்த காலம்...!





http://tamil.oneindia.in

No comments:

Post a Comment