Friday, December 14, 2012

ஒரு கோப்பை மனசு...



‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பார்கள். அதாவது மனம் தெளிவாக இருந்தால் வழி ண்டு என்பதுதான் இதன் பொருளாகும். மனமானது தூசி படிந்த கண்ணாடியாக இருக்குமானல், காணும் பிம்பத்திலும் தெளிவிருக்காது. மனக்கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டுமானால், அது நம் கையில்தான் இருக்கிறது. மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவை இதற்கு உதவும். உடல்நலத்திற்கு எப்படி பயிற்சி அவசிமானதோ அதுபோல மனநலத்திற்கும் பயிற்சி முக்கியமானது.
                                                              
                       
‘மனசே.. ரிலாக்ஸ்…’ எனச்சொல்வது எதற்கென்றால், மனமானது எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே இருகிற காரணத்தால்தான்.பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்பவர்கள், மனதை முதலில் அமைதிப் பூங்காவாக ஆக்க வேண்டும். மன அமைதி நிலையில்தான் வாழ்வின் பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும்.
‘மனம் ஒரு குரங்கு’ என்றனர். முன்னோர். ஆகவே, அக்குரங்கை ஆட்டி வைப்பது நம் கையில்தான் உள்ளது. இந்த வித்தையை கற்றுக்கொண்டால் போதும். அனைத்தையும் நாம் அடைய முடியும்.

                                                      
இதில் கற்றுக்கொள்வது என்பது உள்வாங்குவதின் இன்னொரு வடிவம்தான். ஆம் நன்கு படித்து முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அடிப்படையாக இருந்ததெல்லாம் இந்த உள்வாங்கும் திறன்தான். எந்த அளவிற்கு விஷயங்களை நீங்கள் உள்வாங்குகிறீர்களோ, அந்த அளவிற்கு உயர்ந்து விடுகிறீர்கள். எதையுமே திறந்த மனத்துடன் அணுகினால் சாதிப்பது சுலபம்.
                                                   
ஜென் கதை ஒன்று. குருவிடம் சீடன் ஒருவன் வந்து தான் நிறைய விஷயங்களைக் கற்றிருப்பதாகவும், சில விஷயங்களை மட்டும் தங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் கூறினான். குரு சற்று நேரம் அமைதியாக இருந்தால். பிறகு, அவனை நோக்கி, ‘இதோ இந்தக் கோப்பையில் தேநீரை ஊற்று” என்றார். ஆனால், கோப்பை நிறைய தேநீர் ஏற்கனவே இருந்தது. சீடன் தயங்கினான். குரு சிரித்தபடி சொன்னார்,
நிரம்பிய கோப்பையில் தேநீரை ஊற்ற முடியாது. அதுபோல உன்னுள்ளும் எனது செய்திகள் நுழையாது. போ முதலில் உன் மனக்கோப்பைக் காலி செய்துவிட்டு வா!” என்றார்.
நிறைய எண்ணக் குப்பைகளால் நாமும் நிறைந்திருந்தால் எதையுமே நாம் உள்வாங்கிக்கொண்டு,செயல்படமுடியாது.
ஆகவே, மனக் கோப்பையை காலியாக வையுங்கள். பிறகு பாருங்கள்.. ஒவ்வொரு நாளும் ஆனந்தத்தைப் பருகுவீர்கள்.

No comments:

Post a Comment